எதிர்வரும் இரு வார காலப்பகுதியில் சுற்றுலாக்கள் மற்றும் யாத்திரைகள் போன்ற பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசியத் தேவையின்றி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு, கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களைப் பெறுவதற்காக, தினமும் சுமார் 5,000 பேர் திணைக்களத்திற்கு வருகை தருவதாகவும், இந்நாட்களில் கொரோனா வைரஸ் பரவுவதால் அத்தியாவசியமாயின் மாத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருவோரைக் கட்டுப்படுத்தியுள்ளதோடு, அத்தியாவசியத் தேவை தவிர வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனவும், அவர் கேட்டுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை (16) நள்ளிரவு முதல் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவுடனான இரு வார காலத்திற்கு, ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், நோர்வேயிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிப்பதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, (16) இரவு 11.59 மணி முதல் இத்தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும், அதற்குப் பின்னர் குறித்த நாடுகளிலிருந்து எந்தவொரு விமானமும் இலங்கைக்குள் நுழைய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இக்காலப்பகுதிக்கு முன்னர், குறித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள், இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
