இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையின் கீழ் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறையில் பணியாற்றும் சகலரும் இன்று பணிக்குச் சமூகமளிக்க வேண்டுமெனவும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை விசேட பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும். கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இன்றைய தினம் ; பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மக்கள் கூட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. நாளையதின (இன்று) விடுமறை தினத்தில் பல்கலைக்கழகங்கள், காரியாலயங்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து நிலையங்களை சுத்தம் செய்து புகைபோடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் உதவிகொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.