விநாயகமூர்த்தியின் மறைவு கல்முனை தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்; -மேயர் றகீப் அனுதாபம்


அஸ்லம் எஸ்.மௌலானா-
மூக சேவைகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த கே.விநாயகமூர்த்தி அவர்களின் திடீர் மறைவு, கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாண்டிருப்பு பிரதேச அமைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான கே.விநாயகமூர்த்தியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"துரை என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகின்ற அமரர் விநாயகமூர்த்தி, கல்முனையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்காக உழைத்து வந்த ஒரு சாந்தமான, மனித நேயமிக்க ஒருவராகத் திகழ்ந்தார். இவர் எமது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தொடக்கம் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வரை முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ளார்.

இந்த உறவின் மூலம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கல்முனை மற்றும் அவரது சொந்த ஊரான பாண்டிருப்பு பிரதேசங்களுக்கு அளப்பரிய சேவைகளை முன்னெடுத்திருக்கின்றார். அத்துடன் அவரது மனைவி புவனேஸ்வரி அவர்கள் எமது கல்முனை மாநகர சபையின் ஓர் உறுப்பினர் என்ற ரீதியில் அவருக்கு பக்கபலமாக இருந்து எனது ஒத்துழைப்புடன் மாநகர சபை மூலம் நிறைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக பதவி வகித்த ரவூப் ஹக்கீம் அவர்களின் பல கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பாண்டிருப்பு கிராமத்தில் வீதிகள், மைதானம், மையவாடி போன்றவற்றை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்திருந்தார்.
அவ்வாறே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டிலும் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்கிறார். இவற்றுக்கு மேலதிகமாக தனது சொந்தப் பணத்தின் மூலம் சமூக சேவைகளை ஆற்றுவதிலும் அவர் கூடிய கரிசனை காட்டி வந்துள்ளார்.
இவ்வாறு மக்கள் பணியில் துடிப்புடன் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, இறந்துள்ளார். இது கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது மறைவையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுப்பாலமாகத் திகழ்ந்து வந்த துரையின் மறைவு இன ஐக்கியத்தை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்னாரது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது மனைவியான எமது மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி அவர்களுக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -