கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவா நகரை தலைமையாக கொண்டு செயல்பட்டுவரும் உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்த இதர வேலையாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் சுமார் 389 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,742 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.