நாளை முதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரிவதற்கான சுற்றறிக்கை..Update


நாளை முதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து பணி புரியும் வாரமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடைமுறை தொடர்பில் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அது ஒரு தொற்று நோய் நிலைமையாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக செயற்படுவது அனைத்து அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் பொறுப்பாகும்.

அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்பட மாட்டாது. 2020.03.21 மற்றும் 22ஆம் திகதி மட்டும் சாதாரண அரச விடுமுறை நாட்களாக கருதப்படும்.

பொதுமக்கள் சேவையினை தொடர்ச்சியாக பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கையாக அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சட்டவாக்க நிறுவனங்கள் உள்ளார்ந்த முறைமையொன்றினை பின்பற்றி மார்ச் 20 முதல் 27 வரை தமது அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்ட சில அரச சேவைகளை தொலைமுறைமையின் கீழ் செயற்படுத்த இந்த அனுபவம் அடிப்படையாகக் கொள்ளப்படும்.

மக்கள் வாழ்க்கையை வழமையான முறையில் பேணுவதற்கு தேவையான சுகாதார, உள்ளூராட்சி, போக்குவரத்து, வங்கி, உணவு, நீர், மின்சாரம் ஆகிய வழங்கள் சேவைகளும் உர விநியோகம், நெல் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தொலைமுறைமையொன்றை பயன்படுத்தும்போது குறித்த நிறுவனத் தலைவர்கள் முடியுமானளவு தமது பணிக்குழாமை அலுவலகத்திற்கு வரவழைப்பதை முடியமானளவு மட்டுப்படுத்த வேண்டும். அதற்காக மின்னஞ்சல், (E-mail) குறுஞ்செய்தி, (SMS) தொலைபேசி போன்ற தொழிநுட்ப முறைமைகள் போன்ற மாற்று நடைமுறைகளை பயன்படுத்த முடியும்.

பொதுமக்கள் அலுவலகங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்து, பொதுமக்கள் சேவையை உரிய முறையில் தொடர்ச்சியாக முன்னெடுத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்த வேண்டும். இதற்காக தனிப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்தும்போது மேலதிக செலவுகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் தேவையான நிவாரணங்களை வழங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களின்போது அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் தொடர்ச்சியாக மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு உரிய முறைமையை பின்பற்றுவார்களென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுவதை தவிர்ப்பதே முக்கிய நோக்கமாகும். எனவே பல்வேறு நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சேவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதென்பதால் தமது பணிக்குழாமினரை அறிவூட்டி, பணிக்குழாமினரை மட்டுப்படுத்துவதற்காக தமது நிறுவனங்களில் எழுத்து மூலமான முறைமையொன்றினை ஏற்படுத்திக்கொள்ளல் நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.

தனியார் துறைகளும் மேற்படி முறைமைகளுக்கேற்ப தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து வர்த்தக சபைகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -