சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த வருட இறுதியில் தோன்றி சீனா முழுவதும் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் சீனா திணறுகிறது.
ஒட்டுமொத்த சீனா முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்து விட்டது. இதைப்போல வைரசின் பிடியில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் சீனா முழுவதும் 79,826 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரசின் தாக்கம் இவ்வாறு இருக்க, தற்போது வெளிநாடுகளிலும் அதன் வீரியம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று வரை சீனாவுக்கு வெளியே 64 நாடுகளில் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 108 ஆக அதிகரித்திருக்கிறது.
இதுவரை கண்டறியப்படாத நாடுகளாக அறியப்பட்ட நியூஸிலாந்து, ஐஸ்லாந்து, நைஜீரியா, மெக்சிக்கோ, பெலரஸ், ஹொலன்ட் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியிருக்கிறது. உலகளவில் இந்த வைரஸ் பரவுவதை ‘தீவிரம்’ என பட்டியலிட்டிருந்த உலக சுகாதார நிறுவனம், தற்போது அதை ‘மிக தீவிரம்’ என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
சீனாவுக்கு வெளியே மிக அதிகமாக ஈரானில் 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு 593 பேர் இவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,526 பேருக்கு வைரஸ் தொற்றியிருக்கும் தென்கொரியாவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து விட்டது. மேலும் இத்தாலியில் 1,128 பேருக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதைப்போல ஹொங்கொங்கில் 95 பேர் (2 பேர் உயிரிழப்பு ), தாய்வானில் 39 பேர் (ஒருவர் உயிரிழப்பு), ஜப்பான் 241 பேர் ( 5 பேர் உயிரிழப்பு ) என பல நாடுகளில் வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் புதிதாக வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அங்குள்ள இன்னுமொருவருக்கு கடந்த மாதம் 26ம் திகதி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தொடர்ந்து இந்த மாதம் 2வது வாரம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற திட்டமிட்டிருந்த ஆசியான் உச்சி மாநாட்டை அமெரிக்கா ஒத்தி வைத்திருக்கிறது. இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைப்போல பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் இத்தாலிக்கு விமான இயக்குவதை ரத்து செய்துள்ளன.
சீனாவின் வுஹானில் வசித்து வந்த 112 இந்தியர்கள் சமீபத்தில் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு ரானுவத்தினரின் முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தாய்லாந்தில் பயிற்சியை முடித்து கப்பலில் அந்தமான் திரும்பிய பாதுகாப்பு ராணுவ வீரர்கள் 160 பேர் தொடர்ந்து நடுக்கடலிலேயே கப்பலில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு வைரஸின் தீவிரம் அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் நூற்றாண்டுக்கு ஒருமுறை தோன்றும் மிக தீவிரமான வைரஸாக இருப்பதாகவும், இதற்கு எதிராக உலக நாடுகள் வலிமையாக போராட வேண்டும் என மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.