எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மேற்கொள்ளப்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி இலங்கை மின்சார சபையானது, மின்சக்தி அமைச்சின் எந்தவித அனுமதியுமின்றி சில பகுதிகளில் இரண்டு மணி நேர மின்வெட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அரசாங்கத்திற்கு பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் ஏனைய உறுப்பினர்களாக, பேராசிரியர் ராஹுல அதலகே, ஈ.ஏ. ரத்னசீல, சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
