கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் பாலாவி பகுதியில் இன்று (15) முச்சக்கர வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் - கொழும்பு வீதியின் பாலாவியில் உள்ள ரயில் கடவையை உடைத்துக்கொண்டு பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் செல்லும் ரயிலுடன், குறித்த முச்சக்கர வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனால் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், நபர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.