மாபேரிதன்ன மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் - வேலுகுமார் எம்.பி. அரசாங்கத்திடம் விடுக்கும் அவசர கோரிக்கை


ண்டி, மாபேரிதன்ன மக்களுக்கு காணி உரிமையை சட்டபூர்வமாக பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
கண்டி, திகன பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நேற்று மாலை (23.12.2019) மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் வேலு குமார் எம்.பி. மேலும் கூறியதாவது,

“ மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது, கண்டி - மாபேரிதன்ன பால்பண்ணை தொழிலாளர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு நிலம் பங்கிட்டு வழங்கப்பட்டது.

அமைச்சரவை அனுமதி மற்றும் பால் பண்ணையின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் என சட்டரீதியிலான எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் தன்னிச்சையான முறையில் காணிகள் வழங்கப்பட்டதால், சட்டரீதியாக உரிமை கொண்டாடமுடியாத நிலை பயனாளிகளுக்கு ஏற்பட்டது.

எனினும், ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியின்கீழ் மாபேரிதன்ன பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் நிலவுரியை வழங்கும் வகையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்த கொள்கைரீதியிலான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகயும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு – ஆட்சிமாற்றமும் ஏற்பட்டது.
தற்போது ஆட்சிஅதிகாரம் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் இருக்கின்றது.
எனவே, மாபேரிதன்ன மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுந்தரப்பு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மாபேரிதன்ன பகுதியானது துரிதமாக அபிவிருத்தியடைந்துவரும் வலயமாகும். அப்பகுதியில் உள்ளுர் விமான நிலையத்தை அமைப்பதற்குகூட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, காணி உரிமையானது சட்டபூர்வமாக இல்லாவிட்டால், அம்மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படும் அபாயம் இருக்கின்றது.

எனவே, அம்மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி நில உடமையாளர்களாக்குவதற்கு ஆளுங்கட்சியிலுள்ள தரப்புகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிரணியாக நாமும் எல்லாம் முடிந்த உச்சபட்ட அழுத்தத்தை பிரயோகிப்போம்." என்றார் வேலுகுமார் எம்.பி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -