சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சி.ஐ.டி அளித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டாரா நெலும்தெனிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ரஜித சேனாரத்னவை கைது செய்ய சி.ஐ.டி. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நீதிமன்றத்தில் பிடியாணை கோரியிருந்தது.
இதன்பின்னர் பிடியாணை உத்தரவொன்றை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானினால் சற்றுமுன்னர் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த ஒரு முன் பிணை விண்ணப்பம் எதிர்வரும் 30 ம் திகதி கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.