பதுளை - எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்று இடிந்து விழுந்ததில் அதில் தங்கி இருந்த 3 வெளிநாட்டவர்கள் காயமடைந்து தெம்மோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
20.12.2019 அன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக, தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 3 பேரும் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பில் இருந்து கட்டிட ஆய்வுப் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மானப் பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையம் சந்தேகம் வெளியிட்டிருக்கிறது.
அத்தோடு பண்டாரவளை தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும், புகையிரத பாதையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.