நாட்டில் பல பிரதேசத்தில் தற்போது பருவ மழை பெய்து வருவதாலும் மற்றும் பணியுடன் கூடிய புகைமூட்டமான சீரற்ற காலநிலை நிலவுவதாலும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.நஸ்ருத்தீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது இவ்வருடத்தில் கடந்த மாதங்களை போன்று அல்லாது இம்மாதம் டெங்கு காய்ச்சலினால் அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. பலர் டெங்கு நோய் என நோய் நிர்ணயம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் டெங்கு காய்ச்சலினால் டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள நெய்யினை அறியக்கூடியதாக உள்ளது.
அவசர நிலையினைக் கருத்திற்கொண்டு டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பில் நவம்பர் மாதம் 14 , 19 ஆகிய தினங்களில் இடம்பெற்ற டெங்கு நோய் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி எமது சிறார்களினதும் ஏனையோர்களினதும் பெறுமதிவாய்ந்த உயிர்களை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேற்படி தீர்மானங்களுக்கு ஏற்ப நிறுவனங்களினதும், அதனை அண்மித்த சூழல்களிலும் நுளம்பு பெருகாத வகையில் துப்பரவு செய்வதுடன் கண்டிப்பாக வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக துப்பரவு பணியை மேற்கொள்ள வேண்டும்.
அதே போன்று மறு அறிவித்தல் வரை பாலர் பாடசாலைகள், குர்ஆன் மத்ரஸாக்கள் ,தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரபி கலாசாலைகள் என்பவற்றின் கல்வி மற்றும் செயற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை காலை 9 மணி முதல் 12 மணிவரை மாத்திரம் மேற்கொள்ளவும்.
காலை 6:00 தொடக்கம் 8:00 மணிவரை மற்றும் மாலை 4:00 தொடக்கம் 6:00 மணிவரை டெங்கு நுளம்புத்தாக்கம் ஏற்படக்கூடிய நேரமாகும் இந் நேரத்தில் சிறுவர்களை பாதுகாப்பதுடன் பொதுமக்களும் பாதுகாப்புடன் இருப்பது கட்டாயமாகும். எனவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.நஸ்ருத்தீன் தெறிவித்தார்.
