சர்வதேச மனித உரிமை ஆர்வலர் சிவப்பிரகாசம் கண்டனம்
காரைதீவு நிருபர் சகா-கடந்த 24.11.2019 ஆம் திகதி தனியார் தொலைகாட்சி ஒன்றில் நடைப்பெற்ற அண்மைக்கால அரசியல் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றியிருந்த முன்னால் அமைச்சர் திரு.மனோ கணேஸன் அவர்களுக்கும், அம்பாறை மாவட்ட திரு. அதாவுல்லா அவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தின்போது திரு. அதாவுல்லா மலையக மக்கள் பற்றி குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பற்றி மிக கீழ்தரமான, தரங்குறைந்த வசனத்தை பயன்படுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது. இது மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விடயமாக கருதப்படுகின்றது.
இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் மனிதஅபிவிருத்தி தாபனத்தின் பணணிப்பாளர் நாயகமுமான பி.பி.சிவப்பிரகாசம் விடுத்துள்ள ஊடகச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது செய்தியில் மேலும் குறிக்கப்பட்டுள்ளதாவது;:
ஒரு பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதி ஒரு பொது தொலைகாட்சி நிகழ்ச்சியிலேயே பங்குபற்றி, இவ்வாறு ஒடுக்கப்பட்ட மற்றோரு சிறுபான்மையினத்தை மிக கீழ்தரமான வசனத்தை கொண்டு பேசியிருப்பது, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும். மலையக மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் மட்டுமல்ல, சிறுபான்மை இனத்தவர்களினாலும் ஒடுக்கப்படுகின்றமைக்கும், இனரீதியாக வஞ்சிக்கப்படுகின்றமைக்கும் இது ஒரு உதாரணமாகும். எனவே இது குறித்து அரசியல் வாதிகளைவிட அவர்களை தெரிவுசெய்தவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பாடசாலைகளிலேயே ஆயிரக்கணக்கான வெளியாளருக்கு தொழில்வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இம்மக்களை நம்பியே பலரும் வியாபாரம் செய்துவருகின்றனர். இந்தப்பின்னணி மேற்படி அரசியல்வாதிக்கு தெரிந்திருக்குமா! என்பது கேள்விக்குறியே?
இவ்வாறான அரசியல் வாதிகளுக்கு அந்தந்த மக்களே பதில் சொல்லவேண்டியவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளின் நிதானமற்ற செயன்முறை, அல்லது பேச்சுக்கள் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது. அதேவேளை ஒரு சிறுப்பான்மை மக்களை இழிவுபடுத்துகின்றவர்கள் மன்னிப்பு கேட்பது, அவர்களின் தார்மீக பொறுப்பாகும்.
