தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தினாலும் சிறுபான்மைய இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை. ஆயுதப் போராட்டம் நிறைவுபெற்றதே தவிர தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு செயற்பாடாக இந்த அரசாங்கத்திலே எமது அரசியலமைப்பை மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினரால் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டடு வந்தது. இப்போதும்கூட அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயோ, பிரசார நடவடிக்கைகளிலேயோ சிறுபான்மையினரது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதிலே மாத்திரம் இனவாத ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை அதுரித்து பாலமுனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல். அலியார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐ.எல்.எம். மாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'இந்த ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய பிரதான வேட்பாளர்களிலே கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் பகிரங்கமாகவே சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. தனி பெரும்பான்மையினரின் ஆதரவுடன் எங்களால் ஆட்சியமைக்க முடியுமெனக் கூறுகின்றனர். தேசியக் கொடியிலே தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற செம்மஞ்சள், பச்சை நிறங்களை அகற்றிய தனிச் சிங்கக் கொடியை மாத்திரம் அவர்களது பிரசாரக் கூட்டங்களில் ஏந்தித் திரிகின்றனர். இவ்வாறான நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவை சிறுபான்மை மக்கள் ஆதரிக்கின்றபோது அவரது வெற்றியின் பின்னர் எவ்வாறான மோசமான நிலைமை காணப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். எனவேதான், இனவாதிகளின் கூடாரமாகத் திகழ்கின்ற பொதுஜன பெரமுனவை நாம் ஆதரிக்கவில்லை.
சஜித் பிரேமதாஸ தனக்கு பெரும்பான்மை இன மக்களிடம் இருக்கும் நன்மதிப்பை பயன்படுத்தி சகல இன மக்களையும் சமமாக மதித்து இந்த நாட்டை சுபீட்சமிக்க நாடாக மாற்றப் போகிறேன் என பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறார். எனவேதான் சிறுபான்மையின மக்கள், தங்களது பாதுகாப்பு, இருப்பு, உரிமை போன்றவற்றை கவனத்திலெடுத்து சஜித்தை ஆதரித்து, அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
சஜித் பிரேமதாஸ, தான் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பின் மூலம் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பேன் எனக் கூறியிருக்கிறார். எனவே, சிறுபான்மை மக்கள் அரசியலமைப்பின் மூலம் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பாதுகாப்பாக எமது மத, கலாசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் எமது நோக்கம் சஜித் பிரேமதாஸவை வெல்ல வைப்பதேயாக இருக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் மறைந்த ரணசிங்க பிரேமதாஸவை எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு பாடுபட்டதைப் போன்றே, இப்போதைய வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் கொண்டு வருவதற்கு பிரதானமாகச் செயற்பட்டவர்களுள் ஒருவர் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆவார். மத்தியில் அமையவுள்ள அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு சாதகமான அரசாங்கமாக அமைய வேண்டிய தேவை இருப்பது போல, ஜனாதிபதியும் சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வைப் பெற்றுத் தரக் கூடியவராக இருக்க வேண்டுமென்றால் நாம் சஜித் பிரேமதாஸவையே ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார்.