தனது நிறுவனத்தின் 1% அல்லது 2% பங்குகளை சௌதி வெளியில் விடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியா அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
`வரலாற்று சிறப்பு மிக்க நகர்வு`
வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடுவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல காலங்களாக பங்குச்சந்தையில் நுழைவது குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளில், வெளிநாட்டு பங்குச்சந்தைகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போது இந்த திட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது அரம்கோ.

"சர்வதேச பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்து தகுந்த நேரத்தில் உங்களுக்கு அறிவிக்கப்படும். தற்போது நாங்கள், சவூதி அரேபியா பங்குச்சந்தை வரை மட்டுமே செல்கிறோம்" என்று அரம்கோவின் நிறுவனர் யசிர் அல்-ருமய்யன் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஐ.ஜீ குழுமத்தின் மூத்த பங்குச்சந்தை ஆய்வாளரான கிரிஸ் பௌகேம்ப், "அரம்கோவில் முதலீடு செய்வது என்பதில், அதற்கே உரிய சிக்கல்களும் உள்ளன. அதுமட்டுமின்றி, எண்ணெயின் விலை ஏறுவதும் மிகவும் கடினமாகவே இருக்கும்" என்றார்.
இதனால் அரசியல் ரீதியாகவும், திட்டமிடுதலிலும் அந்தப் பகுதியில் இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திற்குமே ஆபத்து அதிகம், இதில் இந்நிறுவனம், சௌதி அரசின் ஒரு அங்கமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் அப்குவை எண்ணேய் கிணறு மற்றும் குரைஸ் எண்ணெய் வயல்களில் நடந்த ட்ரோன் தாக்குதல்களின்போதே, இத்தகைய ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளவில், மிகவும் நம்பகத்தன்மை கொண்ட எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கிறது என்றும், இந்த நகர்வு `வரலாற்று சிறப்பு மிக்கது` என்றும் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் அரம்கோவின் தலைவர் அமின் நசீர் தெரிவித்துள்ளார்.
"இத்தகைய தாக்குதல்களால், நிறுவனத்தின் வணிகம், நிதி நிலை மற்றும் செயல்பாடுகளில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கவில்லை" என்று அந்நிறுவனம் கூறுகிறது.

சவூதி அரேபியா அரம்கோ என்பது என்ன?
கடந்த 1933ஆம் ஆண்டு, சவூதி அரேபியாவும், கலிஃபோர்னியாவின் ஸ்டாண்டர்ட் எண்ணெய் நிறுவனமும், ஆய்வு செய்து எண்ணெயை தேடுவதற்காக குழிகளை தோண்டும் ஒரு ஒப்பந்தத்தை செய்தன. இதற்காக ஒரு புதிய நிறுவனமும் தொடங்கப்பட்டது. 1973 மற்றும் 1980க்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனத்தை முழுவதுமாக சௌதி அரேபியா வாங்கியது.
வெனிசுவேலாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணெய் சுரங்கங்கள் உள்ள நாடு சௌதி அரேபியா. தயாரிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. அந்த நாட்டில் எண்ணெய் வளம் அனைத்தின் மீதும் இருக்கும் ஏகாபத்திய உரிமை, அவற்றை எடுப்பது எவ்வளவு மலிவாக உள்ளது என்பது போன்ற காரணங்களினாலேயே, சௌதி முக்கியத்துவம் பெறுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனம் இதுதான் என்கிறார், ஷெனிடிர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தை ஆய்வு இயக்குநர் டேவிட் ஹண்டர்.
ஏன் இந்நிறுவனம் இவ்வளவு மதிப்பு மிக்கது?
சவூதி அரேபியா அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறது வணிக செய்தி நிறுவனமாக ப்ளூம்பர்க். ஆனால், சௌதி இதற்கான மதிப்பை 2 ட்ரில்லியன் என்று குறிப்பிட விரும்புகிறது. இவ்வளவு அதிக மதிப்பும், இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்கு வர பலமுறை தாமதம் ஆகியதன் ஒரு முக்கிய காரணம்.

"சமீப காலமாக ஏற்ற இறக்கம் காணும், பல தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து நகர்ந்து நிற்கிறது அரம்கோ. ஆனாலும், சிலிக்கான் வேலியில் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, அரம்கோவின் மதிப்பு என்ன என்பதை கணக்கிடுவதில் பிரச்னைகள் உள்ளன. 2 ட்ரில்லியன் டாலர்கள் என்பது நிறுவனத்தின் மதிப்பை மிகைப்படுத்தி கூறுவதுபோல இருந்தாலும், 1.2டிரில்லியன் என்பது, சௌதியின் முக்கிய அங்கமாக இருக்கும் இந்த அமைப்பை சற்று குறைத்து மதிப்பிடுவதாகவே உள்ளது" என்கிறார் ஐஜி நிறுவனத்தின் பௌசேம்ப்.
எப்படிப்பார்த்தாலும், இது மிகப்பெரிய லாபமான நகர்வே ஆகும். 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 46.9 பில்லியன் டாலர்கள் ஆகும். இதன் பெருந்தொகை, ஈவுத்தொகையாக சௌதி அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு லாபம் ஈட்டும் எந்த ஒரு நிறுவனமும் அதிக விலை போகும்.
அதே அரையாண்டில், உலகில் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த லாபம், 21.6 பில்லியன் டாலர்கள் ஆகும், அதேபோல அதிகமாக பட்டியலிடப்பட்ட எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனத்தின் லாபம் 5.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
தயாரிப்பிற்கான விலையும் இதில் முக்கியமான ஒரு அம்சமாகும். வடக்குக்கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான அடி நீருக்குக்கீழே எண்ணெய் இருப்பதால், அதனை எடுப்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சௌதியில் எண்ணெய், நிலப்பரப்பிற்கு சற்று அருகிலேயே உள்ளது.
சவூதி அரேபியாவில் பல எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்க மிகவும் குறைந்த விலையே ஆகிறது. சில வயல்களில் ஒரு பீப்பாய் எண்ணெய்யை எடுப்பதற்கான விலை 10 டாலர்களுக்கும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 60 டாலர்களாக உள்ளது. இந்த விலைகளில் உள்ள வித்தியாசமும் லாபமே.

ஏன் சவூதி அரேபியா இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கிறது?
எண்ணெய் மீதான சார்பை குறைத்துக்கொள்வதற்காக தனது நிறுவனத்தின் பங்குகளை சௌதி விற்கப் பார்க்கிறது.
விஷன் 2030 என்ற பெயரில், இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு தரப்பை சேர்ந்த வணிகம் இடம்பெறவேண்டும் என விரும்புகிறார்.
இதில், நாட்டில் பரந்து விரிந்துள்ள பாலைவனத்தின் மூலமாக, சூரிய சக்தியை பெற, சோலார் திட்டமும் உள்ளது என்கிறார் ஹண்டர்.
கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேச சுற்றுலாவிற்காக தனது நாட்டின் கதவுகளை 49 நாடுகளுக்கு திறப்போம் என்றும், பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு ஆடை அணிவதில் உள்ள விதிகளில் சற்று விலக்கு அளிக்கப்படும் என்றும் சவூதி அரேபியா அரசாங்கம் கூறியிருந்தது.
இதை ஒரு வரலாற்று நகர்வு என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல்-கத்தீப் தெரிவித்தார். 2030இல் நாட்டின் ஜி.டி.பியில் 3% உள்ள சுற்றுலாத்துறையை 10%ஆக மாற்ற அந்நாடு விரும்புகிறது.
கடந்த ஆண்டு, ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜியின் கொலை மற்றும் சமீபத்தில் நடந்த பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, சர்வதேச நிலையில் சவூதி அரேபியா எவ்வாறு பார்க்கப்படுகிறது, எந்த மாதிரியான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன ஆகியவற்றை தொடர்ந்தே இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு சர்ச்சைகள்?
கஷோக்ஜியின் கொலையை தொடர்ந்து அரசியல் ரீதியாக சவூதி அரேபியாவின் அரம்கோ, தற்போது சிக்கலில் உள்ளதாக கூறுகிறார் ஹண்டர்.
"சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் குறித்த கடந்த கால நிலையை பார்க்கையில், அந்நாடு எந்த விஷயத்திற்காக பேசப்பட்டாலும், அவர்களின் மனித உரிமைகளின் நிலையிலிருந்தே பார்க்கப்படுகிறது" என்கிறார் அவர்.
உலகளவில், எரிபொருட்கள் எடுப்பதற்கு எதிராக வலுத்துவரும் குரல்களும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எண்ணெயின் விலை கனிசமாக குறைந்திருப்பதும் ஒரு காரணம். கடந்த ஆண்டின் இறுதியில் எண்ணெயின் விலை 80 டாலர்களுக்கு அதிகமாக இருந்தது.
"பல நிறுவனங்களும், எரிபொருட்களை எடுப்பதிலிருந்து விலகுவதற்காக பார்த்து வரும் நிலையில், இவ்வளவு பெரிய நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது என்பது சற்று சிக்கலான ஒன்றே. காரணம், பங்குகளை வாங்க முயல்பவர்கள் நெறிமுறைகளை நோக்கி செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது."
மே மாதம், இதேபோன்று, நார்வேவின் 1 ட்ரில்லியன் மதிப்பிலான எண்ணெய் தயாரிப்பு நிறுவனமும், தனது நிறுவனத்தில் சில எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான பங்குகளை விற்கும் என எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு: கேட்டி பிரஸ்காட், பிபிசி வணிக செய்தியாளர்
முன்பு, யாருக்குமே தெரியாமல் இருந்த அரம்கோ நிறுவனம், இந்த நகர்வை செய்வதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக ஆயத்தமாகி வந்ததுபோல தெரிகிறது. தங்களின் நிதி நிலைகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவது, நிறுவனம் குறித்த கேள்வி-பதில் நிகழ்ச்சிகளை நடத்துவது, சமீபத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, சில ஊடகவியலாளர்களை களத்திற்கு அழைத்து சென்றதையும் நாம் பார்த்தோம்.

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சில பெண் அதிகாரிகளை முக்கிய மேல்பொறுப்புகளில் இந்நிறுவனம் நியமித்துள்ளது.
உள்ளூர் மக்கள், குறிப்பாக விவாகரத்தான பெண்கள் கூட பங்குகளை வாங்கலாம் என்றும், 10 பங்குகள் வாங்குவோருக்கு, ஒரு பங்கு கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி:பிபிசி