நல்லாட்சி மட்டும் முஸ்லிம்களைப் பாதுகாத்ததா?
நல்லாட்சி ஆரம்பத்தில் ஓரளவு நல்ல ஆட்சியாகவே ஆரம்பித்தது. அச்சத்தில் உறைந்திருந்த இனவாதிகள் மெதுவாக தலைகாட்ட ஆரம்பித்தார்கள். இரண்டொரு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் உடன் கைதுசெய்யப்பட்டார்கள்.
பொறளைப் பள்ளிவாசலைத் தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். பண்டாரளவளையில் அடுத்த சமூகத்தவர் ஒருவர் முஸ்லிம்கள் சிலரோடு ஏற்பட்ட தனிப்பட்ட கைகலப்பில் கொல்லப்பட்டார். பேரினவாதம் அதைப் பெரும் பிரளயமாக்க முயற்சிசெய்தது. ஆனாலும் போலிசார் நீதிமன்றத்தின் உதவியுடன் நிலைமையை சீர்செய்தார்கள். இவ்வாறு நிலைமை ஓரளவு நன்றாகத்தான் சென்றது.
காலம் கடந்துகொண்டிருந்தது. கடந்த ஆட்சியில் இனவாதப் பேயாட்டம் ஆடியவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கவில்லை. நாய்க்கூண்டில் அடைக்கும் உத்தரவாதம் காற்றில் பறந்துபோனது. நமது கட்சிகள் அதற்காக எந்த அழுத்தத்தையும் அரசுக்கு வழங்கவில்லை. இனவாதிகள் மீண்டும் உசாரடையத் தொடங்கினார்கள்.
குறிப்பாக ஞானசார தேரர் தனது இனவாதக்கணைகளை வீசத்தொடங்கினார். இஸ்லாத்தையும் குர்ஆனையும் மிகமோசமாக நிந்தித்தார். நடவடிக்கை எதுவுமில்லை. தொடுக்கப்பட்ட வழக்கிலும் சட்டப்பிரிவுகளை மாற்றி அவருக்கு உதவியே செய்யப்பட்டது.
அப்போது சட்டம், ஒழுங்கு ஐ தே க அரசிடமே இடமிருந்தது. ஏன் இந்த ஓரபட்சம்? அரசும் கூறவில்லை. இன்று கடந்த இனவாத ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சிக்குவர அனுமதிக்கக்கூடாது; என்பதற்காக அணிதிரளும் மக்கள் கூட்டம் தமக்காகவும் தமது கட்சிகளுக்காகவுமே வருவதாக புளகாங்கிதமடைந்து தமது கைகளை கூட்டங்களில் 100km வேகத்தில் அசைக்கின்ற தானைத் தளபதிகளும் ஏன் என்று கேட்கவில்லை.
அது வளர்ந்து திகன கலவரத்தில் உச்சம் தொட்டது. சட்டம் ஒழுங்கு அவ்வேளை பிரதமரிடம் இருக்கத்தக்கதாக அக்கலவரம் ஐந்து நாட்கள் நீடித்ததற்கு காரணம் இன்றுவரை கூறப்படவில்லை. ஆகக்குறைந்தது, அதனத் தடுக்க, அதனைக் கட்டுப்படுத்தத்தவறிய அதிகாரிகளுக்கெதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை; அவ்வாட்சியின் பங்காளர்களான நம்மிடம் வாக்குப் பெற்றவர்களும் ஏன் என்று கேட்கவுமில்லை.
இவ்வாறு இந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் விரக்தியின் விழிம்பிற்குள் தள்ளப்படார்கள். அவர்களின் விரக்தியைக் களைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ, பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையோ இந்த அரசு வழங்கவில்லை.
அதேநேரம் முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர்களும் அரசுக்கு முட்டுக்கொடுத்து அதன்மூலம் அவர்களை வளர்த்துக் கொண்டார்களேதவிர மக்களின் விரக்தியைப்போக்க, அவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க காத்திரமாக எதையும் செய்யவில்லை.
ஏப்ரல் 21 தாக்குதல்
—————————
ஏப்ரல் 21 தாக்குதல் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவ்வாறு விரக்தியின் விழிம்பிற்குத் தள்ளப்பட்ட வாலிபர்கள் சிலர்-அவர்களில் சிலர் படித்தவர்கள், இன்னும் சிலர் பணக்காரர்கள்- இவர்களை இஸ்லாம் அனுமதிக்காத தீயவழியில் சஹ்ரான் மூளைச் சலவை செய்திருக்கிறான்; என்றால் அவன் இலக்கு என்ன?
ஏன் அந்த இலக்குகளை அவன் வெளியிடவில்லை? அவனுக்கு அவ்வாறு இலக்குகள் இருந்திருந்தால் அவன் எவ்வாறு முதல் தாக்குதலிலேயே தன் உயிரைவிட்டான்? அவ்வாறாயின் இதற்குப் பின்னால் வேறு ஒருவன் தலைவனாக செயற்பட்டானா?
சஹ்ரான் உளவாளியாக இருந்ததாகவும் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் மொட்டுத் தரப்பினர் ஏற்றுக்கொள்கின்றனர். உளவாளி பயங்கரவாதிகளைக் காட்டிக்கொடுப்பவன். அவன் எவ்வாறு பயங்கரவாதியானான்?
அவ்வாறானால் அவனைப் பயங்கரவாதியாக்குவதற்காவே அவனுக்கு பணம் வழங்கப்பட்டதா? ஒரு முஸ்லிம் குழுவை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவைத்து அதனை வைத்து இனவாத அரசியலுக்கு தூபமிடப்படதா?
கடந்த தேர்தலில் 4 1/2 லட்சம் வாக்கினால் தோற்றவர்கள் இம்முறை அதில் பாதிக்கும் சற்றுக் கூடுதலாக பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைப்பெற்று பெரும்பான்மை சமூகத்திற்காக, பெரும்பான்மை சமூகத்தினால் உருவாக்கப்பட்ட, பெரும்பான்மை சமூகத்தவரின் ஆட்சி என்ற தமது இலக்கை அடைவதற்கான முயற்சியா அது? அதால்தானா தாக்குதல் நடந்த சொற்பகாலத்திலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அந்த வேட்பாளர் அறிவித்தார்?
அவ்வாறாயின் இவர்களை நோக்கி அடுத்த தரப்பு மேற்படி கேள்விகளுடன் விரல் நீட்டுவது உண்மையாக இருக்குமா? இத்தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களின் அடுத்த இலக்கு என்ன? இவையெல்லாம் பதில் தெரியாத, நம்மைப் பயமுறுத்துகின்ற கேள்விகளாக இருக்கின்றன.
அதேநேரம் திகன கலவரம், ஏப்ரல் 21 பின்னரான
குருநாகல் மாவட்ட மற்றும் மினுவாங்கொட கலவரங்களைத் தலைமை தாங்கி நடாத்திய அந்த இனவாதக்கும்பல், மற்றும் அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரியான அந்த மதகுரு, டாக்டர் சாபிக்கெதிராக பெரும் நாடகம் நடாத்திய, முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாவால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட வேண்டிய நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிய அந்த மதகுரு உட்பட அனைத்து இனவாதத் தரப்பும் இன்று குறித்த வேட்பாளர் தரப்புடன் ஒன்றிணைந்துருப்பது சொல்லுகின்ற சேதியென்ன?
மறுபுறம் சம்பிக்க இருக்கிறார்; என நியாயம் காட்டி இத்தனை இனவாதக்கும்பலும் ஒன்று சேர்ந்த தரப்பை நியாயப்படுத்த முனைவது சரியா?
இவ்வாறான பல கேள்விகள் யாருக்கு வாக்களிப்பது? என்ற தீர்மானத்தில் தாக்கம் செலுத்துகின்றன.
இந்தப் பின்னணியில்தான் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்காவின் கூற்றும் கவனிக்கப்படவேண்டும்; அதாவது, குறித்த வேட்பாளர் தரப்பு வென்றாலும் தோற்றாலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மறுபுறம், இனவாதத்தின்மூலம் ஜனாதிபதியாகலாம்; என இரண்டாவது முறையாக முயற்சிப்பவர்கள் வெற்றிபெற்றால் இதன்பின் இந்நாட்டில் அரசியலின் முதலீடு இனவாதம்; என்கின்ற நிலை உருவாகாதா? இனவாதமில்லாதவர்களும் இனவாதத்தைக் கையிலெடுக்க மாட்டார்களா? அந்த சூழ்நிலையைத் தடுத்து யாராயிருந்தாலும் சிறுபான்மையின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியாக முடியாது; என்பதை நாம் நிறுவ வேண்டாமா?
—————————————————————-
அதன் விளைவாக இந்நாட்டில் இனவாதத்தினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. சகல சமூகங்களையும் அரவணைத்தால் மட்டுமே அது சாத்தியம்; என்ற ஒரு நிலையை சகல அரசியல்வாதிகளும் உணரக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு நம் கைகளுக்கு வந்தும் அதனை நம் கால்களாலே தட்டிவிடப்போகின்றோமா?
—————————————————————
இந்நாடு இனவாதத்தால் அழிந்த நாடு. அன்று பண்டாரநாயக்க தனி சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்து இந்த நாட்டை அதலபாதாளத்திற்குள் தள்ளி அதன் தொடர்ச்சியாக 30 வருட யுத்தத்தைச் சந்தித்து ஓரளவு நாடு நிம்மதியாய் மூச்சுவிடும்போது மீண்டும் அரசியலுக்காக இனவாதத்தை கையிலெடுத்த, அதிலும் முஸ்லிம்களை பிரதான இலக்காக குறிவைத்த தரப்பை ஆதரிப்பது அறிவுடமையா?
தெரிந்துகொண்டே குழிக்குள்விழ முயற்சிக்கலாமா? ஏன் நம்மில் சிலருக்கு இது புரிவதில்லை.
யானை பார்த்த குருடர்கள்போல் ஒவ்வொரு துண்டைப் பிடித்துக்கொண்டு விவாதம் புரிவது சரியா?
குறிப்பாக, நியாயம் என்பதற்காக அல்லாமல் தமது பக்கத்தை நியாயப்படுத்த வாதிப்பது சரியா? அல்லாஹ்வுக்கு பொருத்தமாக இருக்குமா?
ஒரு தரப்பில் சம்பிக்க இருக்கிறார். அவர் இந்த நாட்டில் ஒரு பெரும் இனவாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தத்தரப்பில் இன்று அறியப்பட்ட பெரும் இனவாதியாக அவர் மட்டுமே இருக்கின்றார்.
மறுபுறம், அவருக்கு சமமான விஜேதாச இருக்கிறார், மேலதிகமாக விமல், உதய கம்மன்பில, டான் பிரசாத், அமித் வீரசிங்க, மதுமாதவ, மதரீதியாக, ஞானசார தேர, ரத்ன தேர, சிங்ஹல ராவய, ராவண பலய, தயாரத்ன அக்மீமன தேர என்ற மொத்த இனவாதக் கூட்டமுமே அந்தப் பக்கம் கூடாரமடித்திருக்கிறதே! இவ்வளவு இனவாதிகளையும் ஒரு சம்பிக்கவுடன் ஒப்பிட்டு சமப்படுத்தி அந்தத் தரப்பிற்கு வாக்குசேகரிக்க முற்படுவது நியாயமா?
இரு பக்கமும் இனவாதிகள் இருக்கின்றார்கள்; என்பதை அடையாளப்படுத்த அது உதவும். இரு தரப்பும் இனவாதத் தரப்புக்கள்தான் என்பதை அறிந்துதானே குறைந்த பாதிப்பான தரப்பைத் தேடுகின்றோம்.
இரு தரப்பு விஞ்ஞாபனங்களையும் பார்த்தீர்களா? ஒரு தரப்பில் சமூக நல்லிணக்கம், பன்முகத்தன்மை தொடர்பாக எதுவுமில்லாதபோது அடுத்த தரப்பில் அதுதொடர்பாக சொல்லப்பட்ட சிலவிடயங்களை ஆராய்ந்தீர்களா?
ஏன் ஒரு தரப்பு எதுவும் குறிப்பிடவில்லை; என சிந்தித்தீர்களா? இத்தேர்தலில் அவர்களின் மூலதனம் ‘இனவாதம்’, சிங்கள மக்களிடம் பேசுவது இனவாதம்; எப்படி அவர்களின் விஞ்ஞாபனம் பன்முகத்தன்மை பற்றி பேசமுடியும்?
இனவாதமும் பன்முகத்தன்மையும் ஒன்றுக்கொன்று எதிரானதல்லவா?
எனவே, சிந்திக்க மாட்டீர்களா?
( இன்ஷாஅல்லாஹ் அடுத்த இறுதிப் பாகத்தில் இறுதி ஒப்பீடும் புள்ளிவிபரமும் இடம்பெறும்)