தங்களைப் பாதுகாக்க வால் பிடிக்கும் முஸ்லிம் தலைமைகளுக்கு பின்னால் முஸ்லிம்கள் கண்களை மூடிக்கொண்டு விழ முடியாது : கலாநிதி அன்வர் முஸ்தபா !!


அபு ஹின்ஷா-
யுத்தத்தின் பிடியில் அகப்பட்டு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு தேசமாக இருந்த இலங்கையை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுத்து இந்த தேசத்தில் எல்லோருடைய முகத்திலும் சிரிப்பை பார்ப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அவரோடு இணைந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து எமது நாட்டின் தலைநகரமான கொழும்பை அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைநகருக்கு ஒப்பாக அபிவிருத்தி செய்து ஏனைய நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் எம்மை தலைநிமிர்ந்து பார்ப்பதற்கு காரணகர்த்தாவாக அமைந்தவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷ அவர்களே என கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளரும், தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

இன்று மாலை சம்மாந்துறையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கலாநிதி அன்வர் எம் முஸ்தபா மேலும் அங்கு உரையாற்றுகையில்,
முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கலோடும் முஸ்லிம் நாடுகளுடனும் கண்ணியமாகவும் ஐக்கியமாகவும் உறவை வைத்துக் கொண்டிருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமான உறவை கொண்ட ஒருவர் . அவருடைய உறவின் நெருக்கத்தை சகித்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சியினர் சதி வலைகளை பின்னி முஸ்லிம் மக்களையும் மஹிந்த ராஜபக்சவையும் பிரித்தார்கள். அந்த நாசகார செயலை செய்ததை அவர்களே தங்களுடைய வாயால் ஒத்துக்கொண்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கின்றது.
இந்த நாடு வெளிநாட்டு குப்பைகளை கொட்டும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது சிறந்த பொருளாதாரக் கொள்கைகலோ சிறந்த பாதுகாப்பு திட்டங்களோ ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் எப்போதும் இருந்ததில்லை. பத்து வருடங்களுக்கு உட்பட்ட ஆட்சியை செய்த மஹிந்த அரசியல் இந்த நாடு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. அதி கூடிய அபிவிருத்தியை கண்ட ஒரு காலகட்டமாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய காலம் இருந்தது.
மஹிந்த அரசில் சிறுசிறு சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த நாட்டை ஆட்சி செய்த எல்லா ஆட்சியாளர்களின் காலத்திலும் இந்த நாட்டில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றது. ஆனால் 95 சதவீதமான முஸ்லிம்கள் வாக்களித்து கொண்டுவரப்பட்ட இந்த நல்லாட்சி திருடர்களை பிடிக்க போகின்றோம் என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடம் ஏறினார்கள் ஆனால் இந்த நாட்டை எவ்வாறு சீரழித்து இருக்கின்றார் என்பதை நான் கூறி நீங்கள் அறிய தேவையில்லை. நாட்டின் கஜானாவை கொள்ளையடித்து காலியாக்கி விட்டு சென்று இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று முஸ்லீம்கள் வாக்களித்து கொண்டு வந்த இந்த நல்லாட்சி பத்து வருடங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை காட்டிலும் இந்த நான்கரை வருட காலத்தில் நான்கு மடங்கு சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றது எனும் கசப்பான உண்மையை நாங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

தேசப்பற்றாளர்கள் ஆக இருக்கின்ற முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தி முஸ்லிம்களுடைய எந்தவித அடையாளங்களும் இலங்கையில் அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு துர்பாக்கிய நிலைக்கு தள்ளி முஸ்லிம்களை அதிஉச்ச மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஒரே அரசு என்றால் இந்த நல்லாட்சி தான். 30 வருட யுத்தம் இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட முஸ்லிம்களுடைய ஜும்மா தொழுகையை நிறுத்திய வரலாறுகள் இல்லை. ஆனால் இந்த நல்லாட்சி அரசில் முஸ்லீம்களாகிய நாம் ஜும்மா தொழுகை கூட நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
பாதுகாப்பான இலங்கையை உருவாக்கி, அபிவிருத்தியில் பின்தங்கிய எமது கிராமங்களை அபிவிருத்தி செய்ய நாங்கள் மீண்டும் ஒரு சிறந்த அரசை உருவாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு தொடர்ந்தும் அநீதிகளை செய்து வருகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் இருப்பதைப் போன்று அவர்களின் பின்னால் நாமும் கண்களை மூடிக் கொண்டு சென்று படுகுழியில் விழ முடியாது. சிந்தித்து நமது எதிர்கால பிள்ளைகள் நிம்மதியாக வாழ, இலங்கையை நிம்மதியான பூமியாக மாற்ற வேண்டும். சிறந்த இலங்கையை உருவாக்க வேண்டிய ஒரு பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -