தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சி: ரத்ன தேரரின் பேரணியை தமிழ் மக்கள் புறக்கனிக்க வேண்டும்


ரு சமூகங்களும் அவதானத்துடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும் - கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவிப்பு
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் இன்று அத்துரலிய ரத்ன தேரர் ஏற்பாடு செய்திருக்கும் பேரணியானது, தமிழ், முஸ்லிம், உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நாடகம் எனவும், சரிந்து கிடக்கும் தனது அரசியல் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடு எனவும் அதற்காக அவர் முஸ்லிம்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் ஊடகங்களுக்கு இன்று (19) கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்று வந்த இனமுரண்பாடு, ஆயுத ரீதியான போராட்டமாக மாறியமை தமிழ், முஸ்லிம் உறவில் வெகுவான பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ,ஏறாவூர் பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம் படுகொலைகள் போன்ற இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகளினால் இவ்விரு சமூகங்களின் உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது .
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கசப்புணர்வுகளும், முரண்பாடுகளும் காணப்பட்ட போதிலும் அண்மைக்காலங்களில் இவ்விரு இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பது போற்றத்தக்க வகையில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. இதனை சீர் குலைப்பதற்காகவேண்டி தீய சக்திகள் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக அத்துரலிய ரத்ன தேரர் ஏவப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் .

சிங்கள பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர் தனது அரசியல் செல்வாக்கு இழந்த நிலையில் தனது அரசியல் இருப்பிடத்தை தக்க வைத்து கொள்ளுவதற்காக மேற்கொள்கின்ற நாடகங்களில் ஒன்றுதான் மட்டக்களப்பு மாவட்ட போராட்டமாகும். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கியமாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அதற்காக அவர் முஸ்லிம்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும்.குறிப்பாக அவருடைய போராட்டத்தில் தமிழ் மக்கள் கலந்துகொள்ளாது தமது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக இன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே அரசியல், பொருளாதாரம் , சமூக, சமய, கலாச்சார, கல்வி, போன்ற சகலத்துறைகளிலும் நல்லுறவு பேணப்பட்டு வருகின்றது. இதற்காக சிவில் சமூகங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான காலகட்டத்தில் தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் இன முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ஆதாயம் தேட அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள் முனைகின்றனர்.

ஒரு குடும்பமாக இருக்கும் தமிழ், முஸ்லீம், மக்கள் தங்களது பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும், ஐக்கியத்துடனும் வாழ்ந்த வரலாறுகளை நாம் ஒருமுறை மீட்டுப்பார்க்க வேண்டும். எமக்குள் ஏற்படுகின்ற சிறிய பிரச்சினைகளையும், கசப்புணர்வுகளையும் தீர்ப்பதற்கு மூன்றாவது சக்தி தேவையில்லை. எமது சமூகங்களுக்கு மத்தியில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசியல் தலைவர்கள் அசட்டையாக இருந்தாலும், சிவில் சமூகத்தவர்கள் தமிழ், முஸ்லிம் உறவை கட்டியெழுப்புகின்ற விடயத்தில் மிகவும் தெளிவாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நாட்டு மக்கள் முக்கியமான தேர்தலொன்றுக்கு முகம்கொடுக்க இருக்கின்ற இக்காலகட்டத்தில் இன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் அத்துரலிய ரத்ன தேரர் ஏற்பாடு செய்திருக்கும் பேரணியானது, அரசியல் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. இது தமிழ், முஸ்லிம், உறவை சீர் குலைப்பதற்கான முயற்சியாகும், சரிந்து கிடக்கும் தனது அரசியல் செல்வாக்கை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் என்ற ஆயுதத்தை அவர் கையில் எடுத்து செயற்படுகின்றார். அவர் முஸ்லிம்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும். இந்த சதிவலையில் சிக்கிக்கொள்ளாது சகல தரப்பினரும் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்துரலிய ரத்ன தேரர் கடந்த காலங்களில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மீது கூறிய கருத்துக்களை நாம் ஒவ்வொருவரும் மீட்டி பார்க்க வேண்டும். இவர் இந்த நாட்டில் சமாதானத்ிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனங்களுக்கிடையில் முறுகளை ஏற்படுத்த விளைகிறார். இவர் குருநாகல்லில் முன்னெடுத்த செயற்பாடுகள் தோல்வியில் முடிவடைந்தது. திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தில் தமில் மக்களுக்காக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. இப்போத மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடித்து, தமிழ், முஸ்லிம் மக்களை தொடர்புபடுத்தி போலிப்பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்.

அரசியல் வங்குரோத்து நிலையில் உள்ளவர்கள், சமூகத்தால் புறக்கனிக்கப்பட்டவர்களின் துணையுடன், தமிழ், முஸ்லிம் மக்கள் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு இனவாத கருத்துக்களை விதைக்க வருகின்றவர்களை விரட்டியடித்து, தமிழ், முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கு தமிழ் சகோதரர்கள் முன்வர வேண்டும் எனவும் சுபையிர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -