வெண்ணை திரண்டுவரும்போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக்கூடாது


வெண்ணை திரண்டுவரும்போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக்கூடாது. எதிரிகளை வீழ்த்துவதற்கு ‘ஒற்றுமை’யே வலிமையான ஆயுதம் என்பதை புரிந்துசெயற்பட்டால் மாத்திரமே தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூடியதாக இருக்கும்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி, கம்பளையில் இன்று (25.08.2019) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஜனாதிபதி தேர்தல்நெருங்கும்வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்துநின்று சொற்சமரில் ஈடுபட்டுவருகின்றனர். புதிய அரசியல் கூட்டணியோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறு கருத்து மோதலில் ஈடுபடுவதானது ஏனையக் கட்சிகளுக்கே களம் அமைத்துக்கொடுக்கும்.
கட்சியின் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை சந்திக்குகொண்டுவருவதானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான விம்பத்தை உருவாக்கிவிடும் என்பதையும் புரிந்துசெயற்படவேண்டும்.
குறிப்பாக ‘ஒற்றுமை’யைக் கருதியே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் பொறுப்பை ஐக்கிய தேசியக்கட்சிக்கே வழங்கினோம். எங்களின் இந்த விட்டுக்கொடுப்பை – தியாகத்தை எவரும் பலவீனமாககருதி செயற்படக்கூடாது. கூட்டணி ஜனநாயகத்தை மதிப்பதாலேயே மிகவும் கௌரவமான முறையில் பங்காளிகளாக செயற்பட்டுவருகின்றோம்.

எனவே, கட்சிக்குள் கலந்துரையாடல்களை நடத்தி, மக்கள் மனநிலையை அறிந்து, மக்களால் கோரப்படும் வெற்றிவேட்பாளரை களமிறக்கும் தீர்மானத்தை ஐக்கிய தேசியக்கட்சி கூடிய விரைவில் எடுக்கவேண்டும்.
நாட்டின் எதிர்காலம், வெற்றிவாய்ப்பு உட்பட இதர காரணிகளையும் கருத்திற்கொண்டே வேட்பாளர் தீர்மானிக்கப்படவேண்டும். 
மாறாக தான்தோன்றித்தனமாக – மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்த வேட்பாளர்களை போட்டிக்காக நிறுத்தக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அதற்கு எதிராகவே நாம் செயற்படுவோம். ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், கூட்டணி அரசாங்கத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு கூட்டு எதிரணி சதித்திட்டம் தீட்டிவருகின்றது. எனவே, இந்த சதிகார வலையில் எவரும் சிக்கவேகூடாது. அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும்போது விழிப்பாகவே இருக்கவேண்டும்.
ராஜபக்சக்களின் ஆட்சிகாலத்திலேயே நாட்டில் அராஜகங்கள், அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. ஜனநாயகம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டது. இப்படியான இருண்ட யுகத்துக்குள் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியே நாட்டை மீட்டெடுத்தது.

இது மக்களுக்கும் தெரியும். எனவே, மீண்டும் இருண்ட யுகத்துக்குள் பயணிக்காது, மீட்டெடுத்த சுதந்திரத்தை, ஜனநாயகத்தை தக்கவைத்துக்கொள்வதே சிறந்த முடிவு என்பதை மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். ஆகவே, மக்கள் மத்தியில் வீண்குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் செயற்படக்கூடாது.’’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -