ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளில் மலையக தோட்டங்களில் இருந்து மக்கள் சாரை சாரையா புகைவண்டிகளில் ஏறி எமது ஊரை விட்டு இந்தியா சென்றதை பத்தனை தங்காப்பூ தோட்டத்திற்கு வந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா கல்வி வலயத்தின் பத்தனை பிரதேச பாடசாலையான கிரேக்லி தமிழ் வித்தியாலயத்துக்கு பத்து இலட்சம் ரூபா செலவில் மைதானம் ஒன்றை அமைத்து அதனை மாணவர்களின் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் பழைய மாணவரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பத்தனை வட்டார அமைப்பாளருமான சின்னவர் சண்முகரட்னம் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் டி.பி.தனபாலன், உதவி கல்வி பணிப்பாளர் வி.நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்டு மைதானத்தை மாணவர்களின் பாவனைக்கு கையளித்து உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
நான் இன்று பத்தனை கிரேக்லி (தங்காப்பூ) தமிழ் வித்தியாலயத்துக்கு வந்திருக்கிறேன். இங்கு வாழ்ந்த ஆசிரியரான எங்கள் உறவினர் இந்தியா சென்ற போது அவரை வழியனுப்ப சிறுவனாக வந்த நினைவே இந்த பாடசாலை சிறுவர்களை கண்டதும் எனக்குள் வருகிறது.
அந்த சிறிய பாடசாலைக்கு இன்று பெரியதொரு மைதானம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடிந்தமை எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த பாடசாலை மிக சிறிய பாடசாலையாக காணப்படுகின்றது.
ஆனால், இது சிறப்பாக இயங்குகின்றது என்பதை அதன் அமைப்பை பார்க்கும்போது எனக்கு தெரிகின்றது. இது ஒரு மிகப் பெரிய பாடசாலையாக இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்த தோட்டத்தில் இருந்து மக்கள் பெருமளவில் இந்தியா சென்றதனால் அது இல்லாமல் ஆகி இருக்கலாம். சிறுவயதில் எங்கள் மாமா ஒருவர் இந்த பகுதியில் ஆசிரியராக இருந்தார்.
அவரது குடும்பம் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் தாயகம் திரும்பியவர்களாக இந்தியா சென்றனர். அவர்களை வழியனுப்ப சிறுவனாக வந்த நினைவு வருகிறது. அவர் இப்போது ஊட்டியில் வசிக்கிறார். இதுபோல 1980 காலப்பகுதியில் மலையக தோட்டப்பகுதிகளில் இருந்து எமது மக்கள் இலட்சக்கணக்காக பேர் இந்தியா திரும்பி சென்றதனால் நமது சனத்தொகை பெருமளவில் குறைவடைந்தது.
மேலும் இதுபோன்ற பாடசாலைகள் மிக குறைந்த மாணவர்களை கொண்டு இயங்கவும் இது ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்தியா சென்ற எமது மக்களும் இருந்திருந்தால் எமது பலம் இன்னும் பல மடங்காக காணப்படும்.
இது ஒரு சிறிய பாடசாலை ஆயினும் எனது பங்களிப்புடன் பெரிய மைதானத்தை பெற்றுக்கொடுத்த பழைய மாணவர் சங்கத்தினர் பாராட்டுக்குரியவர்கள். எங்கள் காலத்தில் மைதானம் அமைப்பதற்கு அரசியல்வாதிகள் நிதி தர மாட்டார்கள். நாங்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லுடைத்து மண் இழுத்துப்போடுவோம். இன்று மைதானத்திற்குள் நுழைந்தபோது வட்டகொடை, பூண்டுலோயா பாடசாலைகளில் மைதானம் அமைக்க மாணவனாக மண்வெட்டிய நினைவுகளும் எனக்குள் வருகின்றன என்றார்.