ஏப்ரல் 21ல் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தமும், அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழல், முஸ்லிம் சமூகத்தின் மீதும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீதும் ஏற்படுத்திய அழுத்தங்கள் மற்றும் அத்துமீறல்கள் காரணமாகவும், சில பௌத்த துறவிகள் மற்றும் பேரினவாதிகளால், முஸ்லிம் சமூகத்தைப்பிரதிநிதிதத்துவப் படுத்தும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்களை பதவி நீக்க வேண்டும் என, முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.ஹரீஸ், அதிரடி அறிவிப்பு ஒன்றைச் செய்திருந்தார். அதுதான் “மூன்று பேரை பதவி விலக நிர்பந்தம் செய்தால் அனைவரும் பதவி விலகி தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என்ற அறிவிப்பு.
பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸின் அறிவிப்பு வெளியாகியதுடன், மிகுந்த மன அழுத்தங்களுடன் இருந்த முஸ்லிங்கள் மத்தியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. ஹரீஸின் அறிவிப்புக்கு முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆதரவு ஏற்பட்டது
அவரது அறிவிப்பு இதுதான்:
மூன்று பேரை பதவி விலக நிர்பந்தம் செய்தால் அனைவரும் பதவி விலகி தக்க பதிலடி கொடுக்க வேண்டும்-ஹரீஸ் அதிரடி !!
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் ஆகியோரின் பதவிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இதர முஸ்லிம் அமைச்சர்களும் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து இனவாத அடிப்படைவாத சக்திகளிக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் ,
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மூவரை பதவி விலகக்கோரி அத்துரலிய ரத்தன தேரர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவரது அந்த போராட்டத்திற்கு பௌத்த சக்திகளின் ஆதரவு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது.
குறித்த பௌத்த இனவாத சக்திகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து முஸ்லிம் தலைமைகளை மூவரையும் பதவியில் இருந்து நீங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் அரசுக்கு ஆதரவு வழங்கும் இதர முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலகி இனவாத சக்திகளுக்கு எமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இனவாத சக்திகளுக்கு அடிபணிந்து எமது மூன்று அரசியல் தலைமைகளை பதவி விலக நாம் அனுமதிப்போமானால், எதிர்காலத்தில் இதே பாணியில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமூலங்களை கொண்டுவந்து இந்த இனவாத சக்திகள் நிறைவேற்றிக்கொள்ள கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மூன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளை தனியே பதவி விலக விட்டு அவர்களை தனிமைப்படுத்தி சமூகத்தை இனவாத சக்திகளுக்கு அடிபணிய விடாமல் தடுக்கு பாரிய பொறுப்பு இதர முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையாகவே சமூகம் சார்ந்த விடயங்களில் பின்னடைவுகள் ஏற்படும்போது வலிந்து முன்னுக்கு வரும் சட்டத்தரணி ஹரீஸ், பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்புச் செய்ததுடன் நின்றுவிடாது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்களுடனும் பாராளமன்ற உறுப்பினர்களுடனும் தொடராக பேச்சுக்களை நடாத்தினார். அவரது முயச்சிக்கு பாரிய வெற்றி கிட்டியது. முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் வகித்த பதவிகளை இராஜனாமா செய்ததோடு ஒன்றிணைந்து செயற்படவும் முடிவெடுத்துள்ளனர்.
முஸ்லிம் பாராளமன்ற பிரதிநிதிகள் அரசை நோக்கி வைத்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேறுமாக இருந்தால் அதுவே வரலாற்று வெற்றியாக அமையும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் மூன்று முக்கிய பௌத்த நிக்காயாக்கள், முஸ்லிம்கள் தொடர்பிலும், அமைச்சுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதத்திலும் வெளியிட்ட ஊடக அறிக்கை இப்போதைக்கு பேசுபொருளாகியுள்ளன.
முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே முஸ்லிம்களின் இருப்பை பாதுக்காக்க முடியும். ஒற்றுமைக்கு வித்திட்ட பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் இலகுவில் மறக்கடிக்கப்படாதவராகி விட்டார்.