எம்.ஏ.எம். முர்ஷித்-
முஸ்லிம் பெயர் தாங்கிய சில விசமிகளினால் நிகழ்த்தப்பட்ட ஈஸ்டர் தின தாக்குதலைத் தொடர்ந்து சில இனவாத ஊடகங்களும் சில இனவாத அரசியல்வாதிகளும் முழு முஸ்லிம் சமூகத்தினையும் வஞ்சித்து அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்கள் மீது இனக்கலவரங்களையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து சமயத்தளங்கள், நம்பிக்கைகள், பொருளாதாரம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தீயிட்டு நாசம் செய்து அழிவுக்குட்படுத்தியதோடு முஸ்லிம் மக்களின் உரிமைக் குரலாக பாராளுமன்றத்திலும் சம்மந்தப்பட்ட உயர் மட்டங்களிடத்திலும் ஒலித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ், ஆளுனர் ஆசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட நமது முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளின் குரலை நசுக்கும் விதமாக அவர்களின் மீது சேறுபூசும் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பெரும்பான்மை அப்பாவி மக்களிடத்தில் நமது தலைவர்களையும் முழு முஸ்லிம் சமூகத்தினையும் சந்தேகத்திற்குறியவர்களாகவும் குற்றவாளிகளாகவும் காட்ட பல சதித்திட்டங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.
அந்தவகையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான போலிக் குற்றச்சாட்டுகளும் நம்பிக்கையில்லா பிரேரணையும் இனவாதிகளினால் கொண்டுவரப்படுகிறது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்
இன்று இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் 14 ஆவது அமர்வின் போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் எதிராக இனவாதிகள் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்களைக் கண்டித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது சிங்கள சமூகத்தில் இருந்தும், தமிழ் சமூகத்தில் இருந்தும் கடந்த காலங்களில் சில தீவிரவாதிகளும் வன்முறையாளர்களும் தோற்றம் பெற்றுத்தான் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்த நாடு பல அழிவுகளை சந்தித்திருக்கிறது, பல தலைவர்களையும் புத்தி ஜீவிகளையும் இழந்திருக்கிறோம், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது, பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றன.
சில மதத் தலைவர்கள் கூட தீவிரவாத அல்லது இனவாத சிந்தனைகளில் சிக்கி நாட்டின் தலைவர்கள் சிலரை கொலை செய்யத வரலாறுகளும் இருக்கின்றன ஆனால் அவர்களை அவர்கள் சார்ந்த மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ அடையாளப்படுத்திக் அவர்கள் சார்ந்த அப்பாவி சமூகத்தை தீவிரவாதிகளாகவும் குற்றவாளிகளாகவும் நாங்கள் அப்போது சித்தரிக்கவில்லை, தீவிரவாதிகளை மட்டுமே தீவிரவாதிகளாக பார்த்தோம், நாட்டை அழிவுப் புதைக்கு இட்டுச் சென்ற இனவாத, தீவிரவாத நிலையிலிருந்து நம் தேசத்தை மீட்டெடுக்க இலங்கை முஸ்லிம் மக்கள் வழங்கிய பங்களிப்புக்களையும் தியாகங்களையும் யாராலும் எளிதில் உதாசீனம் செய்துவிட முடியாது.
ஆனால் இப்போது முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில நாசகாரர்களின் செயலை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் அல்லது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பதோடு இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக இன மத வேதங்கள் இல்லாமல் இரவு பகலாக பாடுபடும் எங்கள் அரசியல் தலைவர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற துடிக்கும் பேரின சக்திகள் மற்றும் இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை வன்மையாக கண்டிக்க வேண்டும்
இது தொடர்பில் சபாநாயகர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவானது சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இயங்கும் பட்சத்தில் நிச்சயமாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அத்தோடு இச்சந்தர்பத்தில் ஊடகங்கள் நியாயமாகவும் நிதானமாகவும் இப்போ பிரச்சனைகளைக் கையாளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இவற்றை உள்வாங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாத முன்னெடுப்புக்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான தங்களது கடணங்களையும் தெரிவித்தனர்.
குறித்த கண்டனத் தீர்மானத்தை நாட்டின் சனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர்களுக்கும் எழுத்து மூலமாக அனுப்பிவைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.