தனியார் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் அவசர கூட்டம்

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான அவசர கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.வாஹித் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அக்கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள் அனைவரும் கூடிய கரிசனை செலுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்காக முன்னெடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விபரித்துக் கூறப்பட்டது.
இதன் பிரகாரம் கல்முனையில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் கல்முனை மாநகர சபையில் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மாலை 5.00 மணியுடன் பிரத்தியேக வகுப்புகள் யாவும் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் தனியார் கல்வி நிலையங்களில் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உயர்தர வகுப்புகளுக்கு அல்லது உயர் கல்வி கற்கை நெறிகளுக்கு வருகை தருகின்ற உள்ளூர், வெளியூர் மாணவர்களின் பெயர் விபரங்களை கல்முனை மாநகர சபைக்கு குறித்த கல்வி நிறுவனங்களினால் சமர்ப்பிக்கபட வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
ஒரு மாணவர் சந்தேகத்திற்கிடமாக நோக்கப்படும்போது அல்லது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்படும்போது அவரை யார் என உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இவ்விபரங்கள் பெரிதும் உதவும் என்பதுடன் உரிய தருணத்தில் பொலிஸாருக்கும் அவை சமர்ப்பிக்கப்படும் என முதல்வர் ஏ.எம்.றகீப் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல முஸ்லிம் மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், பொலிஸ் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் செயற்படுவோரே இவ்வாறு தேவையின்றி கைது செய்யப்படுகின்றனர் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியமாகும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
அதேவேளை தனியார் கல்வி நிலைய சூழல்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் பொதுவாக தமது கல்வி நிலையங்களில் கற்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவதும் கல்வி நிலையங்களில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதும் வரவேற்கத்தக்கது எனவும் பொலிஸ் பரிசோதகரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
அரசாங்க பாடசாலைகளில் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவது போல் தனியார் கல்வி நிலையங்களில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இக்கல்வி நிலையங்கள் இலக்கு வைக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால் கல்வி நிலைய வளாகங்களினுள் அல்லது அண்மித்த பகுதிகளினுள் மாணவர்களினதோ அல்லது வேறு நபர்களினதோ சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு கண்டிப்பாக இடமளிக்கக் கூடாது. வகுப்புகள் கலைகின்றபோது மாணவர்கள் மொத்தமாக வெளியேறுகின்ற சந்தர்ப்பங்களில் கல்வி நிலையங்களின் நடத்துனர்கள் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் வலியுறுத்தினார்.
இப்பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, அவர்களது விபரங்களும் பொலிஸாருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஓர் அசம்பாவிதம் இடம்பெற்று, உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர் கைசேதப்படுவதை விட இத்தகைய பாதுகாப்பு ஒழுங்குகளை முன்னெடுப்பதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் கேட்டுக்கொண்டார்.
நடந்து முடிந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் போன்றல்லாமல் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அல்லாத தரப்புகளினாலும் வேறு விதங்களில் கூட தாக்குதல்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.வாஹித் இதன்போது வலியுறுத்தினார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சுமார் 80 தனியார் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -