நாம் நியூஸிலாந்தைப் பார்த்து பாடம் கற்க வேண்டும்-ரஞ்சித் மத்தும பண்டார

கஹட்டோவிட்ட ரிஹ்மி-

"23
ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் 23 நாட்கள் கடந்து சென்ற பின்னர், சந்தர்ப்பவாதிகள் நாட்டில் மற்றுமொரு பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். 

இதனால் பாதிக்கப்படுவது எமது சிறுவர்களின் கல்வி என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை. அத்துடன் அரசாங்கத்தால் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்ற கருத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகின்றனர். 

அப்படி கூறுவது சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதை நிறுத்துவதற்காகும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நாட்டிலுள்ள அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். நியூசிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் அந்நாடு உலகிற்கே சொல்லிக் கொடுத்த பாடம் இதுவாகும். 

நாங்கள் அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவை (SLAS) இற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான 48 பேருக்கு இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிருவகம் (SLIDA) இல் நேற்றைய தினம் (15) நடைபெற்ற பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "சகல அரசாங்கத்திலும் கொள்கை, தீர்மானம் எடுப்பது நிர்வாக சேவையில் உள்ள நீங்களாகும். இதனால் உங்களுக்குப் பாரிய பொறுப்பு இருக்கிறது. அரச சேவை என்பது வினைத்திறன் அற்றது என்பது பொதுவான கருத்தாகும். தனியார் துறையுடன் ஒப்பிடும் போது இது அப்படித்தான் உள்ளது. நாம் புதிய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டியிருப்பது அலுவலக முறைமை பற்றியோ நிதி முறைமை பற்றியோ அல்ல. வினைத்திறனுடன் எவ்வாறு வேலை செய்வது என்பதாகும். அண்மைக்காலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5%, 6% ஆக கணிக்கப்பட்டாலும், அது 3.4% இனையே அண்மித்திருக்கிறது. இது சேவைப்பிரிவில் ஆகும். எமது விவசாய உற்பத்தியானது 22% இலிருந்து 9% ஆக வீழ்ந்துள்ளது.

நிர்வாகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் நன்றாக அறிந்து வைத்துள்ள விடயம், அரச சேவையில் ஊழலும் துஷ்பிரயோகமும் அதிகரித்துள்ளது. அதுவும் நிர்வாக சேவையிலே (SLAS) மிகவும் அதிகம். அதுவும் கொழும்புக்கு வெளியில் உள்ள பிரதேசங்களில் இது அதிகம். இதனை நாம் மாற்ற வேண்டும். அரசியல்வாதிகளின் பேச்சுக்களை மாத்திரம் கேட்டு செயற்படாமல் நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இன்று பயிற்சி பெறும் சகலருக்கும் கொழும்புக்கு வெளியில் நியமனம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். கிராமங்களுக்குச் சென்றாலேயே மக்களின் ஏழ்மை விளங்கும். அவ்வாறு விளங்கும் அதிகாரிகளாலேயே மக்களுக்கு சினேகபூர்வமான சேவை வழங்க முடியும்.

இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் 48 பேர் ஆவர். அவர்களுக்கு SLIDA இல் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படுவதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 6 வாரங்களுக்கு பிரதேச நிர்வாகத்திற்கான பயிற்சிக்காக அனுப்பப்படுவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -