அம்பாறை அரசஅதிபர் மாநாட்டில் தீர்மானம்!
காரைதீவு நிருபர் சகா-வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இம்முறை எதிர்வரும் யூன் 27ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஜூலை 9ஆம் திகதி மூடப்படும்.
இவ்வாறு அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையிலான முன்னோடி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி உகந்தைமுருகனாய ஆடிவேல்விழா உற்சவ முன்னோடிக்கூட்டம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(28) அம்பாறை மாவட்டசெயலகத்தில் நடைபெற்றது. காலை 10மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2மணிவரை நடைபெற்றது.
மேற்படிகூட்டத்தில் ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம். சுதுநிலமே
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் பிரதேசசெயலாளர்களான சிவ.ஜெகராஜன்(திருக்கோவில்) எஸ்.திரவியராஜா(பொத்துவில்) ஆலயபரிபாலனசபைச் செயலாளர் கு.ஸ்ரீபஞ்சாட்சரம் பொருளாளர் வீ.பத்மநாதன் பொத்துவில் பிரதேசசபைத்தவிசாளர் எம்.வாஸித் இந்துசமய மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர்களான கு.ஜெயராஜ் என்.பிரதாப் மற்றும் பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள் சுகாதாரம் போக்குவரத்து மின்சாரம் பாதுகாப்பு உள்ளிட்ட பல திணைக்களத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் யூலை மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 18ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாகச் செல்வோர் உகந்தமலை முருகனாலயத்தில் ஓரிருநாட்கள் தங்கயிருந்துதான் குமண யாலகாட்டிற்குள் பிரவேசித்து கதிர்காமத்தைச் சென்றடைவது வழக்கம். அதனால் உற்சவம் மற்றும் பாதயாத்திரை தொடர்பாக பலவிடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
குறித்த 12 நாட்களில் நாட்களில் காலை 6மணிமுதல் பிற்பகல் 3வரை மாத்திரமே காட்டிற்குள் செல்ல யாத்திரீகர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தனித்தனியாக அல்லது 5பேர் சேர்ந்து காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். குறைந்தது 15 அல்லது 20பேர் அல்லது அதற்கும் அதிகமான தொகையினர் சேரும்போதுதான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் அடையாள அட்டைகள் கொண்டுவருதல் அவசியம்.
.காட்டுப்பாதை யூன்மாதம்27ஆம் திகதி முதல் 12 நாட்கள் திறந்திருக்கும்.
அக்காலப்பகுதியில் காட்டுப்பாதையால் பயணிப்போர் பொலித்தீன்பாவனையை
முற்றாகத் தடைசெய்யவேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில்
வழங்கமுடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும். காட்டுப்பகுதிக்குள் எக்காரணம்கொண்டும் அன்னதானம் வழங்கஅனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆலய வளாகத்திலும் அன்னதானம் வழங்குவோர் அங்குள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகரின் சோதனை கண்காணிப்பின் பின்னரே மேற்கொள்ளமுடியும்.
ஆலயத்திற்கு வரும் அடியார்கள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக தண்ணீர்த்தாங்கிகள் வைக்கப்படவேண்டும்.காட்டிற்குள்ளும் தண்ணீர்தாங்கி அல்லது வசுசர் வைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. வழமைபோன்று சிவதொண்டன் அமைப்பினர் தண்ணீர்வைக்க முன்வந்தனர்.
இராணுவம் விசேடஅதிரடிப்படை இதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறைக்கச்சேரியும் ஒரு
வவுசரை வழங்கும்.
திருக்கோவில் பிரதேசத்தில் நிலவும் வரட்சி குழாய்நீர்விநியோகநிறுத்தம் காரணமாக நிலவும் குடிநீர்த்தட்டுப்பாடை நீக்குமுகமாக பிரதேசசபைக்கான வவுசர்கள் அப்பணியில் ஈடுபடுவதனால் சபையின் வவுசர் வழங்குவது கடினம் என்று சொல்லப்பட்டது.
விசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பிவைக்கும்.
காட்டுப்பாதையால் செல்லும் யாத்திரீகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ்வனஜீவராசிகள் திணைக்களம் இராணுவம் என்பன இணைந்துவழங்கும்.
உகந்தயையடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரீகர்கள்கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அடியார்களின் பாதுகாப்புக்கருதி சோதனைசெய்யப்படவிருக்கின்றது.
கடந்தாண்டு 25ஆயிரம் பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர். இவ்வாண்டும் அதேஅளவான தொகை எதிர்பார்க்கப்படுகின்றது.
இராணுவமும் வனஜிவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடாத்துவர்.
ஆலயவளாகத்தில் மின்சார வசதி சுகாதாரவசதி யாத்திரீகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் சுத்தமாக
வழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
உகந்தை முருகனாலய சூழலை சுத்தப்படுத்த சிரமதானம்செய்யவிரும்புவோர் நேரகாலத்துடன கொடியேற்றத்திற்கு முன்பதாக தமது பணிகளை பூர்த்திசெய்துமுடித்துவிட வேண்டும்
மேலும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து குமண பறவைகள் சரணாலயத்தினூடாக 6 அல்லது 8 நாட்கள் குமுக்கன் நாவலடி வியாழை கட்டகாமம் என 84கிலோமீற்றர் அடர்ந்த யால காட்டுக்குள்ளால் பயணித்து கதிர்காமத்தைச்சென்றடைவதே இப்பாதயாத்திரையின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.