உயிர்பறித்த ஞாயிறும் சதிராடிய சாய்ந்தமருதும்!யிர் பறித்த ஞாயிறு நேற்றுடன் ஒருவாரகாலத்தை நிறைவுசெய்துள்ளது. அதனிடையே இடம்பெற்றசம்பவங்களுள் சாய்ந்தமருதுச் சம்பவம் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.
உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புச்சம்பவங்களுக்கு உரிமைகொண்டாடிய அதே ஜ.எஸ்.அமைப்புத்தான்தான் கல்முனைச்சம்பவத்திற்கும் உரிமைகோரியுள்ளது.
சாய்ந்தமருதில் நடந்தது என்ன?
அமைவிடம்!
கல்முனைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பூரணமாக முஸ்லிம் மக்களைக்கொண்ட பிரதேசசமாகும். சுனாமியில் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருதுக்கிராம கரையோரரமக்களுக்கு குடியேற்றக்கிராமமாக வொலிவேரியன் என்றகிராமம் மேற்கேயுள்ள வயல்பகுதியில் உருவாக்கப்பட்டது.
சாய்ந்தமருதிலிருந்து மேற்கே ஒரு தனியான பிரதேசம் அது. அந்தக்கிராமத்தில் சுமார் 200 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. அங்கு மைதானங்கள் இஸ்லாமியக்கற்கைநிலையம் சுகாதாரவைத்தியஅதிகாரி அலுவலகம் எனப்பொதுஅமைப்புகள் உள்ளன.
அங்கு குறித்த ஜஎஸ் அமைப்பினர் எவ்வாறு வந்தார்கள் என்பது தொடர்பில் ஊடகங்களில் பலதகவல்கள் வெளிவந்தன.

எவ்வாறு குழுவினர் வந்தனர்?
பிரதான குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹ்ரானின் சாரதி காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டதைத்தொடர்ந்து பல தகவல்கள் புலனாய்வுப்பிரிவினருக்கு தெரியவந்தது. அதனடிப்படையில் சம்மாந்துறையில் செந்நெல்கிராமம் என்றஇடத்தில் இனநடதெரியாதோரின் பதுங்குமிடமிருப்பதாகப் பொலிசாருக்கு தகவல் கசிந்தது.
சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்ககுட்பட்ட அப்பிரதேசத்தை உடனே பொலிசார் இராணுவம் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர். வெள்ளிமாலை இடம்பெற்ற இத்தேடுதலில் தற்கொலை அங்கிஉள்ளிட்ட பலபொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் 7பேரும் சந்தேகத்தில் கைதானார்கள்.
அவர்கள் வழங்கிய தகவலையடுத்து நிந்தவூரின்பக்கம் முப்படையினர் பார்வை திரும்பியது. இதுவும் சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்டது. அங்குவந்துசென்ற வடி ரக வாகனம் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதும் அங்கும் பல வெடிக்கவைக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் படி வாகனம் தப்பியது.
அவ்வாகனம் நேராக குறித்த சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தினுள் நுழைந்துள்ளது.
சம்மாந்துறை நிந்தவூர் சாய்ந்தமருது ஆகிய 3இடய்ஙகளிலும் குறித்த 3வீடுகளுக்கும் தலா 50ஆயிரம் ருபா முற்பணமும் 5ஆயிரம் ருபா மாதாந்த வாடகையும் தருவதாக காத்தான்படியைச்சேர்ந்த மொகமட் நியாஸ் (1982இல் பிறந்தவர்) என்பவரின் பெயரில் வாடகைக்குப்பெறப்பட்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

தகவல் வெளியே வந்தது எப்படி?
சாய்ந்தமருது வொலிவேரியன்கிராம வீட்டில் 5பேர் தங்குவதாக ஏலவே கூறப்பட்டதாம் . ஆனால் சம்பவதினம் சுமார் 19பேர் அளவில் மாலைநேரத்தில் வந்திறங்கியது அங்கிருந்த வீட்டுரிமையாளருக்கும் ஏனைய குடியிருப்பு மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த விடயத்தை அவர்கள் அங்குள்ள பள்ளிவாசலுக்கு அறிவித்தனர். பள்ளிவாசல் நிருவாகிகள் பிரதேச கிராமசேவை உத்தியோகத்தருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து விசாரித்தவேளை வந்த குழுவினர் சற்றுகாரசாரமாக மறுதலித்து விவாதித்ததும் அவர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் திரும்பும் வழியில் வழமையாக பிரதானவீதியில் நிற்கும்பண்டாரவளையைச்சேர்ந்த அனைவரிடமும் நன்றாகப்பழகிவரும் போக்குவரத்துப்பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அவர் அங்கு சென்றவேளை துப்பாக்கிப்பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மயிரிழையில் தப்பி சிராய்ப்புக்காயங்களுடன் அருகிலுள்ள கால்வாய்க்குள் தப்பிவந்து பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் தகவல்வழங்கினார்.
அதன்பின்னர் தீவிரவாதிகள் வெளியேவந்து 5000ருபா காசுத்தாளை வீசியெறிந்து 'அடே காட்டிக்கொடுத்தவனுகளே இந்தக் காசைச் சப்புங்கடா! உங்களுக்காகத்தான் சாகிறோம் ' என்று கத்தினயதாகக்கூறப்படுகிறது.
அதனையடுத்தே சாய்ந்தமருது தாக்குதல் ஆரம்பமாகியது.

அந்தக்கணம்!
அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டு அப்பிரதேச மக்கள் ஒன்றுகூட தொடங்னார்கள். அதன்பின்பு மக்களை கலைப்பதற்காக எடுத்த எந்த முயற்சியும் கைகூடாத நிலையிலும், அங்கிருந்து தங்களது வாகனத்தில் தப்பிச்செல்ல முடியாத நிலையும் ஆயுததாரிகளுக்கு ஏற்பட்டது.
பின்பு 'அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்' என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். துப்பாக்கி சத்தத்தினால் ஊர்முழுவதும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் பதட்டத்துடனும் அச்சத்துடனும் காணப்பட்டார்கள்.

அதேநேரம் இராணுவத்தினர்கள் வருகைதந்ததுடன் கரைவாகு பிரதேசத்தை சுற்றிவளைத்தார்கள். அப்போது ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்குமிங்குமாக தப்பிஓடத்தொடங்கினார்கள்.
அப்போது ஓர் முச்சக்கர வண்டியில் சாய்ந்தமருதை சேர்ந்த ஓர் குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து பதட்டத்துடன் வெளியேற முற்பட்டபோது இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி மனைவி (பாத்திமா அஸ்ரிபா வயது 21)இறந்ததுடன், முச்சக்கர வண்டி செலுத்தி வந்த கணவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் தொடர்ந்தது!
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தாக்குதல் வேட்டை ஆரம்பமாகியது. இரவுவேழளயாதலால் இக்குண்டுவெடிப்புச்சத்தங்களும் துப்பாக்கிவேட்டுச்சத்தமும் நீண்டதூரத்திற்குகேட்டது. என்னநடக்கிறது என்பது மக்களுக்கு அக்கணம் தெரியவில்வை. இரு ஆயுததாரிகளும் ஒரு பெண்சிவிலியனும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மாத்திரமே அப்போது ஊடகங்களில் சொல்லப்பட்டது.
இந்த நேரத்தில் ஆயுததாரிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் குண்டு ஒன்று வெடித்தது. பின்பு சிறுது நேரத்தில் இன்னுமொரு குண்டு வெடித்தது.
இந்த சந்தர்ப்பத்தில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டது. இது பல மணி நேரமாக நீடித்தது. இராணுவத்தினர்களால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்ததும் வீட்டுக்குள் இருந்த ஆயுததாரிகள் முகநூல் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்தவாறு தங்களை காபீர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள் என்று கூறிக்கொண்டு தக்பீர் முழக்கத்துடன் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது.
ஆயுததாரிகளிடம் இராணுவத்தினரை எதிர்த்து சண்டை செய்வதற்காக ஒரே ஒரு T56 ரக துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளதாகவும், மற்றவைகள் குண்டுகளும், அதனை தயாரிக்கும் உபகரங்களும் என்றே அறிய முடிகின்றது.
இந்த தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுததாரிகளை சேர்ந்த 13 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் அவர்களது குழந்தைகளும், பெண்களும் அடங்கும்.பலியான அனைவரும் காத்தான்குடியைச்சேர்ந்தவர்களென்று தெரியவருகிறது.
இராணுவத்தினர்களை எதிர்த்து சண்டைசெய்த ஆயுததாரிகளில் ஒருவர் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார்.
இவர் தற்கொலை செய்ததாக தெரியவில்லை. இவரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் அவரது உடல் காணப்பட்டது. வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தது.
வீட்டுக்குள் எத்தனை பேர்கள் உள்ளார்கள், என்ன நிலையில் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில் இராணுவத்தினர்கள் முன்னெச்சரிக்கையுடன் மிகவும் தாமதித்தே அவ்வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். அதுவரைக்கும் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டபடியே முன்னேறினார்கள்.

துப்பாக்கிதாரிகள் தப்பிக்க நினைத்தால் மக்களை கொலை செய்துவிட்டு தப்பித்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யாது தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்ட அப்பிரதேசவாசி தெரிவித்தார்.
இதன்போது குறித்த பயங்கரவாதியின் தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தையை இராணும் மீட்டு காப்பாற்றியிருந்தனர்.

தன்னையும் குண்டு வைத்து கொல்லமுயன்றது தனது தந்தை என்பதை அறியாத அந்த பிஞ்சுக்குழந்தை எரிகாயங்களுடன் தனது தந்தையை அழைக்கும் காட்சி பலரின் உள்ளத்தை ஒரு கணம் உறையச்செய்ததுடன், தாயாக தந்தையாக குறித்த குழந்தையை அரவணைத்து ஆறுதல்படுத்தி காப்பாற்றிய இராணு வீரரின் மனிதநேயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர் , பரவிவரும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதலால் அகதிகளாக பொலிவேரியன் கிராமத்தில் சுமார் 1400 பொதுமக்கள் சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களுக்குரிய பகல் உணவை சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகம் பொதுமக்கள்மூலம் ஏற்பாடுசெய்திருந்ததாகவும் மேலும், அவர்களுக்கு உதவும்பொருட்டு பிஸ்கட், கேக்இ தண்ணீர் போத்தல், குளிர்பானங்கள், சிறுவர்களுக்கான உணவுகளை சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் மாளிகைக்காடு சாலிஹீன் ஜூம்மா பள்ளிவாசல் என்பவற்றில் வழங்குவதற்கன தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கல்முனை மாநகரமேயர் றக்கீப் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் ஸ்தலத்திற்கு விரைந்தனர். ஊடகவியலாளர்களும் செல்லஅனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் தங்கியிருந்த மக்களை கண்டு ஆறுதல்தெரிவித்தனர்.
அங்கிருந்த இராணுவத்தின் கிழக்குமாகாண கட்டளைத்தளபதி அனுரவிடம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்:

தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிற்சயமாக அனுமதிக்கமாட்டார்கள். அதனால்தான் தீவிரவாதிகள் சம்பந்தமான தகவல்களை வழங்கி அவர்களை பிடித்துக் கொடுப்பதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர் .
சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவம் ஆனது வெளிநபர்கள் இங்கு வந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து இங்க இருந்துள்ள பொழுது இங்குள்ள மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைத்தபொதே இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.
குறிப்பாக தற்பொழது பாதுகாப்;பு படையினர் இங்கு அமையப்பெற்றுள்ள விடுகளை சோதனையிட்டு இவ்வாறான சம்பவத்திற்கு பொறுப்பான சூத்திரதாரிகள் பதுங்கி இருக்கின்றனரா? எனவும் தேடுதல் நடாத்தியிருந்தனர். குறித்த இடத்தில் வசித்துவந்த பொதுமக்கள் பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான விடயங்கள் பல அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகள் இச்சோதனை முடிந்த பிற்பாடு அவரவர் வீடுகளில் தங்க வைப்பதற்கான எற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசுக்கும் படையினருக்கும் இருக்கின்றது என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்...
வீடுகள் படையினரால் சோதனையிடப்பட்டபின்பு நேற்றுமுன்தினம் அ(27) சனிக்கிழமை மாலை 7மணியளவில் வீடு செல்லஅனுமதிக்கப்படதாயினும் அவர்கள் அச்சம் காணரமான நேற்றே(28) சென்றனர் என்று கூறப்படுகிறது.
ஊரடங்குச்சட்டம் ஒன்றரை நாட்களின்பின்பு நேற்று(28) 10மணியளவில் விலக்கிக்கொள்ளப்பட்டது.எனினும் மாலை 5மணிக்கு மீண்டும் அமுலுக்குவந்தது.
தற்போது படிப்படியாக மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பினும் அச்சம் பீதி அவர்களைவிட்டு இன்னும் நீங்கவில்லையென்பதே உண்மை.

வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -