தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தேர்தல் பிரச்சார நிதி தொடர்பான பயிற்சிப்பட்டறை

லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் 'தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி' தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையொன்று  கலை கலாசார பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க  பிரதம வளவாளராக கலந்துகொண்டு ஆரோக்கியமான பல கருத்துக்களை முன்வைத்தார்.

இந்நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் தலைவர் எம்.எல்.ஏ.பௌசுல் அமீர் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கான அறிமுகக் குறிப்பை அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் வழங்கியதுடன் தேர்தல் பிராச்சாரத்திற்கான நிதி தொடர்பான ஆழமான கலந்துரையாடலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் அரசியலே உலகை நிர்வகிப்பதால் அரசியலைப் பற்றிய கல்வித் துறையாகிய அரசியல் விஞ்ஞானமே உலகின் சிறந்த பாட நெறியாக தான் கருதுவதாகக் குறிப்பிட்டார். மேலும் ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாகவும் ஜனாநாயகத் திருவிழாவாகவும் தேர்தல்கள் காணப்படுகிறது எனவும் தேர்தல் தொடர்பாக கற்றுக்கொள்வது பிரஜைகளாகிய எமது கடமை என்றும் குறிப்பிட்டார். இதன்போது இலங்கையில் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினைகளை விரிவாக கலந்துரையாடிய அவர், தேர்தல் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அதற்கான மாற்றுவழிகள் குறித்தும் பயனுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது, அவர் அரசியலின் மீதான மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதற்கு நடைமுறை அரசியலில் காணப்படும் முறைகேடுகளே காரணம் என்பதனையும் எடுத்துக்காட்டினார். நகரத்தினையும் கிராமத்தினையும் இணைப்பதற்கான இணைப்புப் பாலமாக தேர்தல் அமைய வேண்டும் என்ற விடயத்தில் பலமான வாதங்களை முன்வைத்த அவர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் உள்ள சவால்களையும் நிதி குறைந்தோர் தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள சிக்கல்களையும் அடையாளப்படுத்தத் தவறவில்லை.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 18 - 22 இலட்சம் இலங்கை மக்கள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாமலிருப்பதையும் சுட்டிக் காட்டியதுடன் அதற்கான மாற்றுவழிகளாக தனிநபர் வாக்கு முறை, தூதவராலயத்தில் வாக்குச் சாவடிகளை அமைத்தல், இலத்திரனியல் வாக்குப் பதிவு, தபால்மூல வாக்குப் பதிவு உள்ளிட்ட முறைகள் குறித்தும் கலந்துரைடயாலொன்னை நடத்தியிருந்தார். இதன்போது சகல பிரஜைகளும் வாக்களிப்பதற்குரிய வாய்ப்பை பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதனையும் எடுத்துக்காட்டினார். அத்துடன் சுமார் ஐந்து இலட்சம் மாற்றுத் திறனாளிகள் இலகுவாக வாக்களிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் நிதி தொடர்பாகப் பேசுகையில், 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுக் காட்டிய அவர், இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினையும் முன்வைத்தார். இந்தியாவில் வாக்காளருக்கு தாம் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் தொடர்பான விடயங்களை அறியும் உரிமை காணப்படுகின்றது. இலங்கையில் சொத்துக்கள் உடைமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் இவ்வம்சம் காணப்பட்டபோதும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்காக நிதி முகாமைத்துவப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் இத்தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் பங்களிப்பும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தினர். இவ்விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை மதியம் 1.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -