இலங்கையில் இஸ்லாமிய இஸ்ரேல் ஒன்றை உருவாக்குவதற்கு ஐஸ். எஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்றுவித்தோர் முயற்சி


கிழக்கு தேசம் வஃபா பாருக் குற்றச்சாட்டு

காரைதீவு நிருபர்-
லங்கையில் இஸ்லாமிய இஸ்ரேல் ஒன்றை உருவாக்க ஐ. எஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றனர் என்று கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார்.
இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து நாட்டில் முடுக்கி விடப்பட்டு உள்ள பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பேசியபோதே வஃபா பாருக் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-நியூசிலாந்து பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட வண்ணம் இருந்த அனுதாப அலையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதை பிரதான உளவியல் இலட்சியமாக கொண்டு, மூளை சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகளால் இலங்கையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 300 இற்கும் அதிகமான அப்பாவி உயிர்களை குடித்தும், பல பில்லியன்கள் பெறுமதியான பொருளாதார முன்னேற்றங்களையும் அழித்தும் உள்ளன என்று நாம் உணர்கின்றோம்.
இவ்வாறான தாக்குதல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் பலன் பெறுவதற்காக மிக திட்டமிடப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன என்பது கண்கூடான உண்மை ஆகும்.
சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட வண்ணம் இருந்த அனுதாப அலையை இல்லாமல் செய்வது மாத்திரம் அன்றி வெள்ளை மேலாதிக்கத்தின் கறை படிந்த கரங்களை தூய்மையானதாக உலகத்துக்கு காட்ட வேண்டிய உடனடியான தேவையும் இலங்கையில் நடத்தப்பட்டு உள்ள தாக்குதல்களுக்கு ஊக்கிகளாக உள்ளன என்றும் நாம் விசுவாசிக்கின்றோம்.

நியூசிலாந்து பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெள்ளை மேலாதிக்கத்தை அண்மைய காலத்தின் மிக கொடூரமான பயங்கரவாதமாக முத்திரை குத்தின. இந்நிலையில் அதையும் விடவும் மிகவும் பாரதூரமான பயங்கரவாத ம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று நிரூபிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
இவை மாத்திரம் அல்லாமல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன என்பதும் எமது அனுமானம் ஆகும்.

அரசியல் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக இலங்கை உள்ளது. மேலும் இங்கு நிலத்துக்கடியில் எண்ணெய் வளம் இருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வல்லரசுகள் உட்பட பல தரப்பினரும் இலங்கை மீது கண் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தாக்குதல்தாரிகளை காட்டிலும் இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளான பயனாளிகளே பயங்கரமான குற்றவாளிகள் ஆவர். இச்சூத்திரதாரிகளுடைய அபிலாஷை ஒரு போதும் மாற்றம் அடையாத ஒன்றாக இருக்கின்ற அதே நேரத்தில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு அவர்கள் தாக்குதல்தாரிகளை மாற்றுகின்றனர்.

வெள்ளையர்களை ஒருபோதும் பயங்கரவாதிகளாக காட்ட விரும்பாத வெள்ளை மேலாதிக்கம் முஸ்லிம்களையும், யூதர்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வைத்திருப்பதற்கு கங்கணம் கட்டி செயற்படுகின்றது. இதற்காக யூதர்களுக்கு வேண்டிய எல்லாம் இஸ்ரேலில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதே போலதான் யூத இஸ்ரேலை ஒத்த இஸ்லாமிய இஸ்ரேல் ஒன்றை ஏதேனும் ஒரு மத்திய கிழக்கு நாட்டில் தோற்றுவிப்பதற்கு ஐ. எஸ் பயங்கரவாதிகளுக்கு வேண்டிய எல்லாம் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் மத்திய கிழக்கில் இஸ்லாமிய இஸ்ரேல் ஒன்றை உருவாக்குவது சாத்தியப்படாத நிலையிலேயே அதை உருவாக்குவதற்கான மாற்றிடமாக இலங்கையை ஐ. எஸ் பயங்கரவாதிகள் தெரிவு செய்து உள்ளனர் என்று விளங்குகின்றது.
தேசிய தௌபிக் ஜமாத்தை சேர்ந்த ஷஹ்ரான் காசிமின் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் சகிதம் அவர் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் முஸ்லிம்களின் சொத்துகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக வழிபாட்டு தலங்கள் மீது தற்கொலை தாக்குதல்கள் நடத்த போவதாக அவற்றில் ஷஹ்ரான் காசிம் தெளிவாக கோடி காட்டி இருந்தார். ஆனால் நடத்தப்பட்டு உள்ள தற்கொலை தாக்குதல்களில் ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் விகாரைகளுக்கு பதிலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதற்கான பதிலடிகளாக இம்மாற்றம் நேர்ந்து உள்ளது என்று கொள்ள வேண்டி இருக்கின்றது.
இலங்கையில் தாக்குதல் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று புலனாய்வு அறிக்கைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்தபோதிலும் சர்வதேச, உள்நாட்டு ஸ்தாபனங்கள் மற்றும் நிபுணர்களால் வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கையை அவர்கள் ஏன் உதாசீனப்படுத்தினார்கள்? என்கிற பிரதான கேள்விக்கு விடை காண வேண்டி உள்ளது.
அதே போல அகில இலங்கை ஜமய்த்துல் உலமாவால் நீண்ட காலத்துக்கு முன்பாகவே ஷஹ்ரானின் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், நடத்தைகள் ஆகியன குறித்து பலமான வீடியோ ஆதாரங்கள் சகிதம் அறிவிக்கப்பட்டபோதிலும் எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளும் பாதுகாப்பு தரப்பினரால் எடுக்கப்படவே இல்லை என்றே தெரிகின்றது. பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த அலட்சிய போக்குக்கான காரணம் என்ன?
வண பேராயர் மல்கம் ரஞ்சித் முஸ்லிம் அல்லாதவர்களும் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்று இருக்கின்றனரா? என்பது குறித்த விசாரணை அவசியமானதாக உள்ளது என்று சுட்டி காட்டி உள்ளார்.

இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த அரசியல், சமூக செயற்பாட்டு அமைப்பு என்கிற வகையில் இப்பயங்கரவாத தாக்குதல்களில் வேறு யார் பங்கெடுத்து இருக்கின்றனர்? இந்த இரத்த களரியை ஏற்படுத்தியதன் மூலம் அரசியல், பொருளாதார ரீதியாக நன்மை அடைந்திருப்பவர்கள் யார்? என்று பரந்து விரிந்த கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட வேண்டும் என்று நாம் அரசாங்கத்தை கோருகின்றோம்.
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஆகவே நாம் எல்லோரும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எல்லா வழி வகைகளிலும் பாதுகாப்பு படையினருக்கு பூரண உதவி, ஒத்தாசை வழங்க வேண்டும், இஸ்லாமிய முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து முற்றாக துரத்துவதற்கு கிழக்கு தேச முஸ்லிம்கள் அனைவரும் உச்ச பட்ச பங்களிப்புகளை வழங்குதல் வேண்டும்.
அதே நேரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் உண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் அல்லர் என்கிற உண்மையை கிறிஸ்தவ, பௌத்த சமூகங்களை சேர்ந்தவர்கள் அவர்களுடைய சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு முடிந்த வரையில் விளங்கப்படுத்த வேண்டி இருக்கின்றது. அப்பயங்கரவாதிகளை முஸ்லிம்களாக கருத முடியாது. பயங்கரவாதிகள் மொத்தத்தில் பயங்கரவாதிகள் மாத்திரமே. ஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் இஸ்லாமிய இஸ்ரேலை உருவாக்குவதற்காக இஸ்லாமிய முத்திரை குத்தப்பட்ட உள்நாட்டு கடுமை போக்காளர்களை பயன்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு ஐ. எஸ் ப்யங்கரவாத இயக்கத்தின் இந்த திட்டம் தெரியாதுதான்.
எது எப்படி இருந்தாலும் இத்தாக்குதல்களை நாட்டின் இறைமைக்கு ஏற்பட்டு உள்ள பாரிய சவாலாக அரசாங்கமும், ஏனையவர்களும் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒரு தனியான சமயமாக பிரகடனப்படுத்த வேண்டும். சாத்தானின் சமயம் என்று அதற்கு பெயரிட வேண்டும். ஏனென்றால் பயங்கரவாதத்தை தவிர்த்த எல்லா சமயங்களும் அன்பு, அமைதி, சக வாழ்வு, சகோதரத்துவம் ஆகியவற்றையே போதிக்கின்றன. இத்தருணத்தில் முஸ்லிம்கள் மீது உண்மையான அன்பையும், அக்கறையையும் பௌத்த, கிறிஸ்தவ, இந்து சகோதரர்கள் பொழிவதன் மூலம் முஸ்லிம்களும் இலங்கையர்கள் என்கிற உள்ளுணர்வை எமக்கு ஏற்படுத்தி தாருங்கள் என்றும் கோருகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -