பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 5 Counter Terrorism Bill and Its Impact-Part 5

வை எல் எஸ் ஹமீட்-

பாகம் 4 இல் பயங்கரவாத குற்றமாக மேற்படி சட்டத்தில் கருதப்படக்கூடிய சில விடயங்களைப் பார்த்தோம்.

அதில் சாதாரண சட்டங்களால் கையாளப்படக்கூடிய சாதாரண அல்லது சிறிய குற்றங்களைக்கூட பயங்கரவாத குற்றமாக இச்சட்டத்தின்கீழ் கருதமுடியுமெனப் பார்த்தோம்.

பிரிவு 13இல் அக்குற்றங்களை இழைப்பதற்கு ஆயத்தம் செய்கிறார், அல்லது உதவுகிறார், என்று ஒருவருக்கு நம்புவதற்கு காரணம் இருந்தும் அந்தத்தகவலை அவர் அருகேயுள்ள பொலிசிற்கு அறிவிக்காவிடின் அதுவும் பயங்கரவாதக்குற்றமே!

அதாவது X என்பவர் ஒரு பயங்கரவாத குற்றத்தைப் புரியப்போகிறார் அல்லது புரியப்போகின்றவருக்கு உதவுகிறார். அவ்வாறு Y நம்புவதற்கு காரணம் இருக்கின்றது; என பொலிசார் நினைக்கின்றனர். ஆனால் Y பொலிசுக்கு தகவல் வழங்கவில்லை. இப்பொழுது அவர் இப்பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம்.

இங்கு, குற்றவாளியா இல்லையா என முதலில் பொலிசார்தான் தீர்மானிக்கிறார்கள். அதன்பின் தடுப்புக்காவல் போன்ற அனைத்து வேதனைகளையும் அனுபவித்தன்பின் நீதிமன்றத்தில் நியாயங்களை முன்வைத்து விடுதலைபெற முயற்சிக்கலாம்.

சுருங்கக்கூறின் அருவாக்காட்டு குப்பை கொட்டுவதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சிலவேளை யாராவது பஸ்ஸிற்கு கல்லெறிந்தால் அவரை பயங்கரவாதியாக கருதலாம். அல்லது கல்லெறிய அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; ஆனாலும் அவர் கல்லெறிய ஆயத்தம் செய்தார்; 

என கைதுசெய்யலாம். மட்டுமல்ல, இவர் கல்லெறியப்போகிறார்; என்பது இன்னொருவருக்குத் தெரிந்தும் அவர் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை; 

என அவரையும் கைதுசெய்யலாம். இவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே!

ஐ நா மனித உரிமை உயரதிகாரி குறிப்பிடும்போது, பொலிசார், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படையினர் பல தரப்பட்ட செயற்பாடுகளை பயங்கரவாதமாகவும் அவற்றோடு நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டார்; என ஒருவரை இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்; எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையான பயங்கரவாதக் குற்றங்களே பயங்கரவாதமாக கருதப்பட வேண்டும். இவ்வாறான சட்டங்கள மூலம் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும்போது, ஒரு குற்றம் ஏன் பயங்கரவாதமாக கருதப்படவேண்டும், அதற்குரிய சட்டப்பின்னணி என்ன? அந்தக்குற்றம் பயங்கரவாதமாக கருதப்படவேண்டிய அளவு முக்கியமானதா/ பாரதூரமானதா? என்பவை சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; எனவும் தெரிவித்திருக்கின்றார்.

பிரிவு 14 இன்கீழ் ஒரு பயங்கரவாத குற்றத்தை விசாரிக்கின்ற ஒரு பொலிஸ் அதிகாரி இன்னுமொருவரிடம் அது தொடர்பாக சில தகவல்களைக் கோரும்போது அவர் பிழையான தகவல்களை வழங்கினார்; என சந்தேகித்தால் அவரையும் கைதுசெய்யமுடியும். அவரும் பயங்கரவாதியே!

அதேநேரம் பிரிவுகள் 15 மற்றும் 27 இன்கீழ் பொலிசார், கடலோர காவல் மற்றும் முப்படையினர் பயங்கரவாதக் குற்றம் புரிந்தார்; என்ற குற்றச்சாட்டில் வாறண் இல்லாமல் யாரையும் கைதுசெய்ய முடியும், அவை உண்மையான பயங்கரவாதக்குற்றமாக இல்லாதபோதிலும்கூட.

பிரிவு 17 மேற்படி தரப்பினருக்கு கைதுசெய்வதற்கு அதீத அதிகாரத்தை வழங்குகின்றது.

பிரிவு 27 இன்கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் நிதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அவருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டிருக்குமாயின் அதனை அங்கீகரித்தே ஆகவேண்டும்.

இங்கு நீதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இதேபோன்றதொரு நிலை பிரிவு 39(4) இன் கீழும் காணப்படுகின்றது.

இவ்விடயங்கள் குறித்து ஐ தா மனித உரிமை அதிகாரி குறிப்பிடும்போது, ஒருவர் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும்போது அவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் வழங்கப்பட்டால் அவ்வாறு தடுப்புக்காவல் அவசியமா? அது சட்டத்திற்கு ஏற்புடையதா? அது அவர் செய்த குற்றத்திற்கு பொருத்தமானதா? என்பவற்றைத் தீர்மானிக்கக்கூடிய முழுமையான அதிகாரம் நீதித்
துறைக்கில்லை; எனத் தெரிவித்திருக்கின்றார்.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -