மாலைதீவு ஜனாதிபதி விவகார அமைச்சர் அஹ்மத் நஸீம் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு தூதவர் ஒமர் அப்துர் ரஸாக் ஆகியோர் நேற்றைய தினம் (05) பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை சந்தித்தனர்.
மாலைதீவைப் பாதிக்கும் வெள்ள அனர்த்தத்தை முகாமை செய்தல் மற்றும் அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது தொடர்பாக இலங்கையின் ஒத்துழைப்பை தமது நாடு எதிர்பார்ப்பதாக இதன் போது மாலைதீவின் ஜனாதிபதி விவகார அமைச்சர் அஹ்மத் நஸீம் தெரிவித்தார். இதற்கு இலங்கை மிகவும் தகுதிவாய்ந்த நாடு என்று தாம் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அதிக சனத்தொகை மிக்க நகரான தலை நகர் மாலேயில் மழை வீழ்ச்சி வருடா வருடம் விரைவாக அதிகரித்து வருவதும் வெள்ளம் பெருக்கெடுப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இலங்கையின் ஆலோசனை தமக்கு அதிகம் தேவைப்படுவதாக மாலைதீவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மத்தும பண்டார, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு, இத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவை நியமித்து, மாலைதீவு அரசுக்கு உதவும் படி ஆலோசனை வழங்கினார்.