எஸ். அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாணத்தில் மலசலகூடம் இல்லாத வறிய குடும்பங்களுக்கு மலசலகூடங்களை நிர்மாணித்து சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த திட்டத்தினூடாக பொத்துவில் பிரதேசத்திலும் மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (4) பொத்துவில் பிரதேச சபையில் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலையினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர் அன்வர் சதாத், வீடமைப்பு அதிகார சபையின் முகாமைத்துவ. உதவியாளர் எம்.பீ.எம்.அஷாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

