ஒரு பௌத்த பெண்ணை நீதி மன்றத்தில் வைத்துப் பகிரங்கமாக அவமானப்படுத்தியமைக்காக ஒரு நீதிபதியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி சட்ட மா அதிபர் வழக்குத் தொடுத்து நீதி மன்றம் தீப்பளித்த பின்னர் மேல் முறையீட்டு நீதி மன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்த பின்னர் அந்தக் குற்றவாளியை விடுவிக்கும்படி பௌத்த குருமார்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள். பல நிறுவனங்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என்றால் நீதி மன்றங்கள் எதற்கு??
இந்த நாடு அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு ஒரு இனத்திற்கு மாத்திரம் சொந்தமான நாடு அல்ல இந்த நாட்டிலே இருக்கின்ற சட்டம் அனைத்து மக்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், மஞ்சள் உடை தரித்தவர்களுக்கு ஒரு சட்டம், பெரும்பான்மை மக்களுக்கு ஒரு சட்டம், சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் என்றால் இந்த நாட்டில் நீதியை நிலை நாட்டிவிட முடியாது.
பொது பலசேனா இயக்கமும் அதன் செயலாளர் ஞானசார தேரரும் இந்த நாட்டில் விதைத்து விட்ட இனவாத நச்சு விதைதான் இன்று வேர் விட்டு விருட்சமாக இந்த நாட்டை மெல்ல மெல்ல சுடுகாடாக்கிக் கொண்டிருக்கிறது.
அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு பிழையான வழிகளை காட்டி அவர்களை பிழையான மார்க்கங்களுக்கு கொண்டு சென்று இனங்களுக்கிடையிலே குரோதங்களையும் குரோத மனப்பாங்குகளையும் உருவாக்கி இந்த நாட்டிலே இன வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர் ஞானசார தேரர் என்பது சகலரும் ஏற்கும் உண்மையாகும். இவ்வாறான ஒருவரை,
ஒரு பௌத்த பெண்ணை நீதி மன்றத்தில் வைத்துப் பகிரங்கமாக அவமானப்படுத்திய குற்றத்திற்காக மேல் முறையீட்டு நீதி மன்றமே குற்றவாளி என அடையாளப்படுத்தி சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவரை, பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முனையும் அரசின் செயற்பாடு கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இன்று ஞானசாரவை நல்லவர் என்றும் நாட்டுக்கு சேவைகள் செய்தவர் என்றும் அதனால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஒப்பாரி வைக்கும் பேரினவாதிகளின் கைகூலிகளே! அரசியல் தலைவர்களே!
ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டால் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார் இன வன்முறையை தூண்ட மாட்டார் என நீங்கள் உத்தரவாதம் தருவீர்களா??
இனவாதத்தை மீண்டும் இந்த நாட்டில் துளிர்விட செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் என உத்தரவாதம் தருவீர்களா??
நாட்டின் அரசியல் யாப்பையும் நாட்டின் நீதியையும் சட்ட திட்டங்களையும் பேணியும் மதித்தும் நடப்பார் என உத்தரவாதம் தருவீர்களா??
மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி அவர்களே!
ஹனீபா மதனி அவர்களே!அரசியல் தலைமைகளே! உங்களால் உத்தரவாதம் தர முடியுமா??
மஞ்சள் உடையை காட்டிக்கொண்டும் சட்டத்தின் பிடியில் இருந்தும் தப்பித்து இளைஞர்கள் மத்தியிலே இனவாதத்தை விதைத்து இந்த நாட்டை அழிவின் பாதையில் இட்டுச்செல்லும் ஞானசார தேரர் போன்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் முயற்சியை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் கைவிட வேண்டும் என்பது எமது கோரிக்கையும் வேண்டுகோளுமாகும்.