திருகோணமலை மற்றும் ஹொரவ்பொத்தானை பகுதிகளில் மோசடியான முறையில் பணத்தாள்களை அச்சிட்டு விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
கெப்பித்திகொல்லாவ நீதவான் எச். கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ. பீ மொஹான் விஜேரத்ன தலைமையிலான குழுவினர் இன்று (14) மாலை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த ஜூனைதீன் சறூக் நஸ்லிம் (35வயது) எனவும் தெரியவருகின்றது.
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் மோசடியான முறையில் அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபாய் தாள்கள் 29ஐ கடைகளுக்கு விநியோகம் செய்யும் போது பொலிஸாரினால் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் பிரதான சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை காலை ரொட்டவெவ பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மொரவெவ பொலிஸாரினால் ரொட்டவெவ பகுதியில் ஒரு இலட்சத்தி 75,000 ரூபாய் போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹொரவ்பொத்தான மற்றும் திருகோணமலை பகுதிகளில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத் தாள்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேக நபர் இவர் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.