கடும் போக்கிற்குள் நுழையும் மைத்திரியின் வெள்ளோட்டம் வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும்


சுஐப் எம் காசிம்-
புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னர், இத்தனை எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ளதால் அரசியலில் ஆரோக்கிய சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாதுள்ளது. இதனால் இத்தனை காலமாக இழுத்தடிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லாட்சி அரசிலாவது அமுலுக்கு வரும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் படிப்படியாக மறைந்து போவதும் புலனாகி வருகின்றது.

பௌத்த கடும்போக்கு அரசைத் தோற்கடித்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.இந்த நம்பிக்கையில் திரண்ட சிறுபான்மையினரே ஒட்டு மொத்தமாக வாக்களித்து ராஜபக்ஷவை வீழ்த்தினர். ஆனால் சிறுபான்மை சமூகங்களின் நாயகனாகத் தன்னை சுயவிளம்பரம் செய்த ஜனாதிபதியின் மன நிலைமைகளும் படிப்படியாக பழங்கதைக்கு புதுவியாக்கியானம் தருவதாகப் பொருட்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்தை தூக்கி வீசிவிட்டு பாராளுமன்ற ஜனநாயத்தை பலப்படுத்த வந்த மைத்திரி,மீண்டும் நிறை வேற்று அதிகாரத்தை தூக்கிப்பிடித்துள்ளார். பௌத்த கடும்போக்கு சிந்தனையை அரசியல் மூலதனமாக்கி ராஜபக்ஷவின் சிந்தனைக்குள் நுழைவதுதான் அவரது திட்டமாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் வெள்ளோட்டமே 2018 ஒக்டோபர் 26 அரசியல் சதிப்புரட்சி.கடும் போக்கு சக்திகளின் அழுத்தங்களுக்கு இணங்கி தற்போது இரண்டாவது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரின் தயவில் ஆட்சியமைக்க வழிகோலும் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது எனக்கூறி தென்னிலங்கை களத்தை, மைத்திரி பரீட்சித்துள்ளார்.இவரின் இரண்டாவது வெள்ளோட்டம் வெற்றியின் இலக்கை எட்டியுள்ளதாகவே "கம்பம்" காட்டுகிறது.

மூன்றாவது வெள்ளோட்டமாகவே தேசிய அரசுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.ராஜபக்ஷ அணியின் தயவுடன் ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்கான மைத்திரியின் வெள்ளோட்டங்கள் வெற்றியளிக்குமானால், அரசியல் களம் கொதி நிலைக்குள்ளாகும்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வரும் மைத்திரியின் மீண்டெழும் ஆசைகள்,தமிழ் முஸ்லிம் சமூகங்களின் அபிலாஷைகளை அழிக்கப் போர்க்கோலம் பூண்டதாக விஸ்வரூபம் எடுக்கும் .இந்த விஸ்வரூபத்தின் ஒரு முகமே புதிய அரசியலமைப்புக்கான மைத்திரியின் எதிர்ப்புக்கள்.அப்படி இந்த புதிய அரசியலமைப்பில் என்ன தானுள்ளது?. இதற்கு முன்னர் வரையப்பட்ட நகல்களில் என்னதானிருந்தன?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மொழி பேசும் சமூகங்களின் பரந்து விரிந்த நிலப்பரப்பிலுள்ள காணிகளுக்கு விடுதலை வேண்டும், இங்குள்ளோருக்கு தொழில்வாய்ப்புகள் வேண்டும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், இங்குள்ள மக்கள் பின்பற்றும் மதங்களுக்கு அரச அந்தஸ்து வேண்டும், பல்கலைக்கழக அனுமதியில் காட்டப்படும் பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும்.பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும்,தங்களைத் தாங்கள் ஆளும் சுய அதிகாரம் வேண்டும். இத்தனை தேவைகளுமே ஒரு தனி நாட்டுக்கான அடையாளத்தை வேண்டி நிற்கின்றன.

முப்பது வருட காலப்போரில் பங்கேற்காவிட்டாலும் பாதிப்புற்ற சமூகம் என்ற வகையில் புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் கட்சிகள் சிபார்சு செய்த விடயங்கள் எவை?. அவை தமிழரின் அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்கின்றதா? அவ்வாறு குறுக்காகவுள்ள யோசனைகளை முஸ்லிம் தரப்புகள் முன்வைப்பது தவறா? இதற்கு முன்னர் வந்த யோசனைகள் நிராகரிக் கப்பட்டதே! ஏன்? இது பற்றிய விளக்கங்கள் முஸ்லிம்களுக்கு தற்போது தேவைப்படுகிறது.ஐக்கிய இலங்கை என்ற வாசகத்திற்குள் சகல இனத்தவரும் ஐக்கியப்பட முடியாதா? சமஷ்டிச் சிந்தனையில் நாடு பிளவுபடுமா?

பாரிய நிலப்பரப்பில் மொழி, தொழில், கலாசாரங்களில் ஒன்றித்துள்ள சமூகங்கள் அல்லது மக்கள் கூட்டத்திற்கு சமஷ்டி வழங்குவதே அரசியல் நடைமுறை யாக உள்ளது. இந்த சமஷ்டி அரசுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் மத்திய அரசுக்கு இருந்தாலும் வேட்டைக்காரன் அம்பை எடுப்பது போல் மத்திய அரசுக்கு அதிகாரத்தை கையிலெடுக்க முடியாது. ஒட்டு மொத்தமாகக் கூறினால் பிராந்தியங்களின் அரசுகள் முழு நாட்டினதும் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் மட்டுமே, சமஷ்டி மாநிலங்களை, அல்லது சமஷ்டி அரசுகளை கலைக்கும் யோசனைக்கு மத்திய அரசு செல்லமுடியும் .இந்தச் சமஷ்டிதான் தமிழர்களுக்குத் தேவைப்படுகின்ற தீர்வு. ஆனால் முஸ்லிம்களுக்கு எந்தத் தீர்வு வேண்டும்?. இதில்தான் இன்று குழப்பம்.
உண்மையில் வடக்கையும் கிழக்கையும் பிரித்தால் தமிழர்கள் எதிர்பார்க்கும் சமஷ்டித் தீர்வுக்குச் சாத்தியமில்லை. குறுகிய நிலப்பரப்புக்கும், சிறிய மக்கள் தொகையினருக்கும் இவ்வாறான அதிகாரங்களை வழங்குவதும் நடைமுறையில் இல்லை. அமெரிக்கா, இந்தியா, கனடா, ரஷ்யா, சீனா, போன்ற நாடுகளிலுள்ள அதிகாரச்சமநிலைக்குச் செல்ல வேண்டுமானால் இணைந்த வடக்கு, கிழக்கிலே அது சாத்தியம். இந்த அதிகாரத்தை வேரறுக்கவே இம்மாகாணங்களை இணைக்க பௌத்த கடும்போக்கு பின்னடிக்கிறது. இதற்கு முஸ்லிம்களைக் கருவியாகப் பாவிப்பதாகவும் ஒரு விமர்சனம் உண்டு.
தமிழ் மொழி மாநிலங்கள் நிச்சயமாக வேறு எந்த சிங்கள மாகாணங்களுடன் சேர்வதற்கும் சாத்தியங்கள் இல்லையே! ஏதாவதொரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் சேர்வதானால் சேர விரும்பும் மாநிலங்களில் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்கிறது புதிய அரசியலமைப்பு நகல். அதற்காக கிழக்கு, ஊவாவுடன் சேர விரும்புமா?
அம்பாரைக் கச்சேரியில் சிங்களம் தெரியாமல் கிராமப்புற தமிழர்களும், முஸ்லிம்களும் எதிர் கொள்ளும் சிரமங்களை அவதானித்தால் சிங்கள மாகாணங்களுடன் தமிழ் மொழி மாகாணங்கள் இணைவதை எதிர்பார்க்க முடியாது. காணிப் பிரச்சினைகளை ஒரே மொழி பேசும் சமூகத்திற்கிடையில் தீர்க்க முடியாதுள்ள நிலையில் பிற மொழி மாநிலங்களுக்குள் தீர்க்க முடியுமா? இவை பற்றிச் சிந்தித்தால் மாகாணங்களின் இணைவு என்பது வடக்கு,கிழக்கிற்கு மாத்திரமே பொருந்துகிறது.ஏற்கனவே விளக்கிய ஒரு தனி நாட்டுக்கான அடையாளத் தேவைகளும் இம்மாகாணங்களிலே உள்ளன. இது பற்றித்தான் தமிழ், முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

புதிதாகத் தோன்றும் பிரச்சினைகளிலிருந்தே புதிய அரசியல் சிந்தனைகளும் எழுகின்றன. இந்த வகையில் 1990 க்கு முன்னர் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து செல்வது பற்றிச் சிந்திக்கவில்லை. வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றமும், கிழக்கில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களுமே முஸ்லிம்களை ஒரு தனித் தேசியமாக அடையாளப்படுத்தியது. இதிலிருந்து தான் வடக்கு, கிழக்கில் இரு சமூகங்கள் நிலைப்படத் தொடங்கின.

மாகாணங்களின் இணைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என்பதற்காக, தமிழர்களின் அபிலாஷைகளில் மண்ணை வாரிப்போட்டதாக அர்த்தப்படாது. ஏற்கனவே பெற்ற பாடங்களின் அனுபவத்திரட்சியே இக் கட்சியின் இந்தப் புதிய அரசியல் சிந்தனை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எதையும் வாய்திறப்பதாக இல்லை. தமிழர்களின் அபிலாஷைகளை அழிக்கக் கூடாதென்ற அக்கட்சியின் மென்மைப்போக்கு பாராட்டப்பட வேண்டியதுதான்.எனினும் இக் கட்சியின் நீண்டகால,மௌனம் ஒரு சமூகத்தின் இருப்பை அழித்துவிடுமோ என்பதே இக்கட்சி அபிமானிகளின் அச்சம்.முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு யோசனைகளை கடுமையாக எதிர்ப்பது ஏன்?
என்னைப் பொறுத்தவரை இப்பிரச்சினைக்கு வெள்ளோட்டமாக ஒரு தற்காலிகத் தீர்வை வழங்கலாம் தமிழ் மொழி மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து இரு சமஷ்டி அரசுகளைப்பெறுவது. இவ்விரு அரசுகளின் மோதல்களை தீர்த்து வைக்க மத்திய அரசின் மத்தியஸ்த சபையை உருவாக்குவது. மாகாணங்களுக்கு இடையில் மோதல்கள் வந்தால், அல்லது ஒரு மாகாணத்தின் நடத்தையில் சந்தேகம் எற்பட்டு பிறிதொரு மாகாணம் முறைப்பாடு செய்தால், மாத்திரம் வடக்கு,கிழக்கு சமஷ்டி அரசுகளைக் கலைக்கும் அதிகாரத்தை கொழும்பு அரசுக்கு வழங்கல். இதுவே இப்போதைக்குப் பொருந்தும் தீர்வாக இருக்கும். இந்தத் தீர்வைத் தருவதற்கு ரணிலின் டையமன்ஸ் எலைன்ஸ் தயாரானாலும் தமிழ், முஸ்லிம் தலைமைகள் தயாராகுமா? அவ்வாறு தயாரானாலும் பௌத்த கடும் போக்கு எம்பிக்களின் ஆதரவு கிடைக்குமா?
அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவின் ஆலோசனைகளைக்கூட, இதுவரை படிக்கவில்லை என்கின்ற ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்,நாடு பிளவுபடப் போவதாக கர்ஜிக்கும் மஹிந்தவின் மொட்டுக் கட்சியும் இதற்கு வழி விடுமா? இவ்விரண்டு அணிகளினதும் இணைவுகள் நிச்சயமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைக்க இணக்கம் தெரிவிக்குமா?எனவே இணைப்பை வைத்து டையமன்ஸ் எலைன்ஸும், பிரிப்பை வைத்து மொட்டு அணியும் அவிழ்க்கவுள்ள பிரச்சாரங்கள் எமது நாட்டை என்ன செய்யும்?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -