மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறத்தடை விதிப்பு..!

ஐ. ஏ. காதிர் கான்-

மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்று, அதனை சட்ட விரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்துபவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அனுமதிப் பத்திரங்களைப் பெறத் தடை விதிக்கும் தீர்மானம் நேற்று முன் தினம் (20) எடுக்கப்பட்டது. 

இதன்பிரகாரம், இந்தத் தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான சட்ட திட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் பணிப்புரை விடுத்தார்.
நேற்று முன் தினம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களுடனான விசேட சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தார்.

இச்சந்திப்பின்போது, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்த நாயக்க, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கீகனகே மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, இங்கு சமூகமளித்திருந்தோர்,
"படகு ஓட்டுநர்கள் செய்யும் குற்றங்களுக்காக, உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் அவல நிலை இடம்பெற்று வருகிறது" என்பதாக முறையிட்டனர்.

அதற்கு இராஜாங்க அமைச்சர், "குற்றம் செய்தவரைத் தப்பிக்க வைத்து விட்டு, நிரபராதியைத் தண்டிக்கும் இம்முறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான குற்றவாளிக்கு உயர்ந்த தண்டனையை வழங்குவதற்காக, புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்றார்.
"இந்த ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கொண்ட இராஜ தந்திர செயற்பாடுகள், தற்போது வெற்றியைத் தந்துள்ளன. 

இதனால் தான், சட்டவிரோதமாக மீன்பிடிப் படகுகளின் மூலம் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற குழுவில் 64 பேர் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எமது அடுத்த முயற்சி, இவ்வாறான கடத்தல் காரர்களை இனங்காண மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் உடனடியாக தலையீடு செய்து அதனைத் தடுப்பதற்கு வசதியாக ஏ.பீ.பீ. (APP) ஒன்றை அறிமுகம் செய்து வைப்பதாகும். இவ்வாறு செய்வதன் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களைக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன், சட்டவிரோதச் செயல்களைக் குறைப்பது இதன் மற்றுமொரு நோக்கமாகும். இத்திட்டம் மிகவும் வெற்றியைக் கொடுக்கும் என நம்புகின்றோம்.

இது தவிர, படகு ஓட்டுநருக்கு (ஸ்கிப்பர்) எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

படகு உரிமையாளருக்கும், ஓட்டுநருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருப்பது போன்று, ஓட்டுநருக்கும் கடற்றொழில் திணைக்களத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதே எமது அடுத்த திட்டமாகும்.

இதன் கீழ், படகு ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கவுள்ளோம். ஆட்கடத்தல் அல்லது சட்டவிரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் படகு ஓட்ட முடியாதவாறு அவர்களது அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும்" என்றும் இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -