மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்துவருகின்றார். அந்தவகையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை நேற்று (13) புதன்கிழமை மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இராஜாங்க அமைச்சர் சந்தித்து குறித்த பாடசாலையினை தரமுயர்த்துவதற்கான ஆளுநரின் அனுமதி பெறப்பட்டது.
அதற்கமைவாக அல் மனார் மத்திய கல்லூரியினை தேசியபாடசாலையாக தரமுயர்த்தும் நடவடிக்கையினை விரைந்து முன்னெடுக்குமாறு ஆளுநரினால் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பில் அல் மனார் மத்திய கல்லூரி அதிபர் பி.எம்.எம். பதுறுத்தீன் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் ஆளுநருடனான இச்சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த பாடசாலையினை தரமுயர்த்துவதற்கு தேவையான ஆவணங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
மேலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் இன்று (14) வியாழக்கிழமை குறித்த பாடசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அப்பாடசாலையினை தேசியபாடசாலையாக தரமுயர்த்துவதற்கான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கான பணிப்புரையினை ஆளுநனர் விடுத்துள்ளார்.