தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி கடந்த திங்கட்கிழமை (21) முதல் வெள்ளிக்கிமை (25) வரை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் 'போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்' எனும் தொனிப் பொருளிலான நிகழ்வுகள் நடைபெற்றன.
ஜனாதிபதியின் விசேட எண்ணக்கருவுக்மைய தேசிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் பாவனை தடுப்பு வாரத்தையொட்டி பாடசாலையின் அதிபர் எம்.எச் அப்துல் றஹ்மான் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (21) மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பாக விழிப்பூட்டும் வகையில், மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சமூக சீர்திருத்த அதிகாரி எம்.எஸ்.எம். இக்ராம் கலந்து கொண்டு விளக்கமளிததார். மேலும், பாலமுனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர்ககளால் மாணவர்களுக்கு விசேட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் போதைப் பொருளுக்கு எதிரான பிரகடனமும் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாடசாலை மட்டத்தில் மாணவர்களால் போதைப் பொருள் பாவனை பற்றிய வகுப்பறைச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (22) பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மதுசாரம், போதைப் பொருள் பாவனையினால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் கலந்து கொண்டு விளக்கமளித்ததுடன், மாணவர்களும் பெற்றோர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
மூன்றாம் நாளான புதன்கிழமை (23) போதைப் பொருள் பாவனை தொடர்பான சட்டங்கள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் ஏ. காலித் கலந்துகொண்டு அதுதொடர்பான விளக்கமளித்ததோடு, மாணவர்களது சட்ட ஏற்பாடுகள் பற்றிய சந்தேகங்களுக்கான பதில்களும் அளிக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
நான்காம் நாளான வியாழக்கிழமை (24) அரசியல் பிரமுகர்களால் போதைவஸ்து பாவனையைக் குறைப்பதற்கான பங்களிப்புகள் பற்றியும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவத பற்றியும் தெளிவூட்டும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.எம். ஹனீபா கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
ஐந்தாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு ஊடகங்களது பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பாகவும் போதைப் பொருளற்ற பிரதேசத்தை கட்டியெழுப்ப மாணவர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்வது என்பது தொடர்பாகவும் சிரேஸ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
அத்துடன், போதைப்பொருளை பாடசாலை அயற் சூழலில் கட்டுப்படுத்துவதற்கான உறுமொழியை வெளியிட்டு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் உறுதிமொழிப் பதாதையில் கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றதுடன், போதை வஸ்து பாவனைக்கு எதிரான மாணவர்களின் ஊர்வலமும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர் பி.முஹாஜிரீன் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.