கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது சிறு வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பாசறையில் அரசியலைக் கற்று அவருடன் ஒன்றாகப் பாராளுமன்றம் நுழைந்த பெருமைக்குரியவர்.
அவருடைய ஆரம்ப அரசியல் பிரவேசமாக 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற இணைந்த வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது 25 ஆவது வயதிலேயே மாகாண சபைக்குச் சென்று அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற 9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு 15,832 விருப்பு வாக்குகளைப் பெற்று தனது 26 ஆவது வயதில் ஒரு இளைஞனாகப் பாராளுமன்றம் சென்றார்.
ஐந்து (05) ஆண்டுகள் கடந்து மீண்டும் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பத்தாவது (10) பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு 12,583 விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார். அவரின் இரண்டாவது பாராளுமன்ற அனுபவத்தில் தனது 30 ஆவது வயதில் தபால் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டு அதன் மூலம் கிழக்கு மாகாணம் முழுவதும் பரந்த சேவைகளைச் செய்து மூவின சமூகங்களிடையே நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு கட்சிக்குள் இடம்பெற்ற உட்பிரச்சனை ஒன்றின் காரணமாக ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் கட்சியில் இருந்து கலாநிதி ஹிஸ்புல்லா தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி சதியில் சிக்கி தலைவர் அஸ்ரப் பலியானார். அதன் தொடராக கட்சியின் தலைமைப் பொறுப்பை தலைவரின் துணைவியார் பேரியல் அஷ்ரபுக்கு எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் தலைமைப் பதவி ரவூப் ஹக்கீ முக்குச் செல்ல கட்சியை விட்டு விலகி மர்ஹூம் அஸ்ரப் அவர்களால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி (NUA) கட்சியின் தலைவியாக பேரியல் அஸ்ரப் நியமிக்கப்பட்டு அதன் துணைத் தலைவராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இலங்கையின் 12ஆவது பாராளுமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு நடைபெற்றபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கூட்டணி (PA) சார்பாகப் போட்டியிட்டு 19,785 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் ஹிஸ்புல்லா தெரிவானார்.
மீண்டும் நான்காவது முறையாக 13ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பாகப் போட்டியிட்டு 23,813 விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் இத்தேர்தலில் அக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. அதனால் பாராளுமன்றம் செல்ல முடியாமல் இருந்தாலும் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைத் தலைவராக நியமிக்கப்பட்டு மீண்டும் 2004 , 2005 காலப்பகுதியில் அரச விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் சேவை நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்..
அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டார். அப்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சியை ஆரம்பித்திருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசில் (ACMC) 2008 ஆம் ஆண்டு இணைந்து 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண வடக்கில் இருந்து பிரிக்கப்பட்ட கிழக்கின் முதலாவது தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சந்தர்ப்ப வசமாக முதலமைச்சுப் பதவி சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) வழங்கப்பட ஹிஸ்புல்லாஹ் சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக நலம், நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள், பெண்கள் விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தகவல் தொழில்நுட்ப கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோகம். ஆகியவற்றின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் தொடர்ந்து மாகாண சபையில் இருக்காது மீண்டும் 2010ஆம் ஆண்டு 14ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பாகப் போட்டியிட்டு 22,256 விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
மீண்டும் இறுதியாக நடந்த 15ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பாக அதிக சவால்களின் மத்தியில் சொற்ப வாக்கினால் தோல்வியடைந்தார்.
கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டதன் பயனாக தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கி இராஜாங்க அமைச்சும் வழங்கி கெளரவித்தனர்.
ஆனால் கடந்த நான்கு முறை வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று பிரதி அமைச்சுக்களைப் பெற்றுக் கொண்டபோதிலும் இம்முறை இராஜாங்க அமைச்சு மற்றும் சில நாட்கள் முழு அமைச்சும் கிடைத்திருந்தன.
அத்துடன் கிழக்கு மக்களின் கோரிக்கையாக இருந்த கிழக்கின் முஸ்லீம் ஆளுநர் என்ற அந்த இலக்கு இன்று இவர் மூலம் நிறைவேறி இருப்பது கிழக்கில் வாழும் அனைத்து சிறுபான்மை மக்களும் பெருமைப் படவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
அத்துடன் கிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்குகளும் சரியாக அறிந்து சேவைகளைச் செவ்வனே செய்து வெற்றி கண்டவர்தான் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எனவே அவருக்கு கிழக்கின் ஆளுநர்பதவி வழங்கப்பட்டிருப்பது அனைவராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்றே.
அத்துடன் பதவிக்காக யாருக்கும் குழிதோண்டாது தனக்கு துதிபாட ஏனைய சில அரசியல்வாதிகளைப் போன்று பணங்களைக் கொடுத்து எழுதுவதற்கோ பொய்ப்பிரச்சாரங்கள் செய்வதற்கோ யாரையும் பணியாத ஒரு சிறந்த அரசியல் மேதை என்பதுடன் முஸ்லீம்கலின் அரசியல் முத்திரையாக திகழ்ந்து முஸ்லீங்களுக்கென்றே தனியான கட்சியொன்றை ஆரம்பித்து உலகமயமாக்கி முத்திரை பதித்து முத்தாகிப்போன மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்குப் பின் அதிகளவாகப் பேசப்படும் ஒருவராகவே கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திகழ்கிறார் என்பது இன்றய ஆய்வாளர்களின் கணிப்பாகும்.
நன்றி:
எஸ்.எல்.முனாஸ்
அட்டாளைச்சேனை.