சம்மாந்துறை பிரதேசத்தில் பல்கலைக் கழகத்திற்கு தகைமை பெற்ற மாணவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபை BCAS கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வழிகாட்டல் கருத்தரங்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் எவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பது தொடர்பாகவும், இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டப் படிப்புக்களை நிறைவு செய்தாலும், தொழில் பெற்றுக் கொள்ளக்கூடிய தகைமைகளை பூர்த்தி செய்யக் கூடிய உயர் படிப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும், உயர் தொழில் தகைமை கல்வியை தொடர முடியாதவர்களுக்கான உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எப்.எச்.வீ.சிப்லி, BCAS கல்வி நிறுவனத்தின் கல்முனை முகாமையாளர் எம்.ஹமீட் அலி, பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.