ஆளுனராக ஹிஸ்புல்லாஹ்வை ஜனாதிபதி நியமனம் செய்தது ஜனாதிபதியின் எதிர்கால அரசியலுக்காகவே தவிர" அதன்மூலம் சமூகம் எந்த நன்மையும் அடையாது என்று சொல்லும் மாற்றுக் கருத்து அரசியல் உறவுகளே!
உங்களிடம் நான் கேட்கிறேன்
இத்தனை காலமாக எமது அரசியல் உத்தமர்கள் யாராவது எதிர்கால அரசியல் நோக்கம் இல்லாமல் எதையாவது மக்களுக்கு செய்து உள்ளார்களா?
இத்தனை காலமாக அரசியல் இலாபத்தை எதிர்பாத்துத்தானே ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றிக் கொண்டு அரசியல் செய்து வருகிறார்களே எமது வீராப்பு தலைவர்கள் அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்??
அதைச் செய்கிறேன் இதைப் பெற்றுக் கொடுக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் மக்களை நம்பவைத்து பொய் வாக்குறுதியைக் கொடுத்து வாக்குகளை சூரையாடிச் செல்கிறார்களே' இவர்கள் எதை கருத்தில் கொண்டு செய்கிறார்கள்" மறுமையைக் கருத்தில் கொண்டா? இல்லை சமூகத்தை கருத்தில் கொண்டா?
சட்டி பானை தொடக்கம் வீதிகள் போடுவதில் இருந்து கக்கூஸ் கட்டுவது வரை எதிர்கால அரசியலை நோக்கமாக வைத்துத்தானே மக்களை பயன் படுத்துகிறார்களே எம்மவர்கள் அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
ஒரு பாண் துண்டு கொடுப்பதில் இருந்து பாப்பாசி மரம் நடும்வரை அனைத்துமே எதிர்கால அரசியலை வைத்துத்தானே கட்சியை வளர்ப்பதற்கு வங்குரோத்து அரசியல் நடத்திக் கொண்டு வருகிறார்கள்! அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
அது அவ்வாறு இருக்கும்போது நீங்கள் கூறுவதுபோல் ஜனாதிபதி தனது கட்சியை கட்டியெழுப்புவதற்கு கிழக்கு மாகாண சரித்திரத்திலே சிறுபான்மை இனத்தவர் ஒருவரை ஆளுனர் ஆக்கியதில் என்ன தப்பு இருக்கிறது?
சரி ஜனாதிபதி கொடுத்தது அவரின் இலாபத்துக்காகவே என்று வைத்துக் கொள்வோம்" அதைப் பயன்படுத்தி முடிந்தளவு சமூகத்தின் தேவையை பெற்றுக் கொள்வதுதானே புத்திசாலியின் வேலை அல்லவா!
அதை செய்ய விடாது' வாய்க்கு வந்தபடி தலை கால் வைத்து கூடிநின்று ஜனாதிபதி கட்சியை வளர்க்கப் போகிறார் ஹிஸ்புல்லாஹ் ஏஜண்டாக இயங்கப் போகிறார் என்று ஒப்பாரி வைப்பதனால் எதை சாதிக்கப் போகிறீர்கள் போராளிகளே!
உங்கள் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டுக் கேழுங்கள்' இத்தனை வருடங்களாக இந்த கிழக்கு மாகாணத்து மக்களுக்கு' குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு எத்தனையோ காணி பிரச்சினைகள் இருந்தும்' மேடைகளின் தொண்டை கிழிய பேசுவதுபோல் யாராவது செயற்பாட்டில் விடயத்தை முன்னெடுத்தார்களா?
இல்லை எவராவது, எந்த கட்சியாவது முஸ்லிம் ஒருவரை ஆளுனராக கொண்டு வருவதற்கு முயற்சித்தார்களா?
இல்லவே இல்லை எல்லாம் மேடைப் பேச்சோடு மட்டும் கலைந்து விடும் காணல்நீராகவே நடந்தேறியது அவ்வப்போது என்பது எல்லோரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இதைச் சொன்னால் மனம் ஏற்றுக்க மறுக்கிறது கட்சியின் மேலுள்ள பற்றினாலும் தலைவர்கள் மேலுள்ள பாசத்தினாலும்.
ஆனால் தற்போது தனக்கு சார்பான கட்சியிலோ அல்லது தான் போற்றும் தலைவனுக்கு சார்பானவர்களோ எவரும் ஆளுனராக வராததன் காரணமாகவே' இன்று பலகூட்டங்களா சேர்ந்து கடந்தகால நிகழ்வுகள் அனைத்தையும் மூடிமறைத்து புதிய ஆளுனருக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களை குறுகிய சிந்தனையுள்ள விசுவாசிகள் என்று சொல்லுவதே மேல்.
அதையும்விடவும் கேவலமான விடயம் என்னவெனில்" ஹிஸ்புல்லாஹ்வின் ஆளுனர் பதவியை மாற்று மதத்தவர்கள்தான் வேற்றுக் கண் கொண்டு பார்த்து இனவாத கருத்துக்களை விதைக்கிறார்கள் என்று பார்த்தால். எமது சமூகத்தின் உள்ளவர்களும் பொறாமை உணர்வுடன் நயவஞ்சக பார்வையில் கருத்துக் கூறுவதை நினைக்கும்போதே இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள் இருக்கிறாதா என்றும் என்னத்தோன்றுகிறது
சுப்ஹானல்லாஹ்! இப்படியான சுயநல குறுகிய எண்ணம் முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும் யாராக இருந்தாலும் சரியே.
அதற்காக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆளுனராக வந்த உடனே முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றோ, அனைத்து காணிப் பிரச்சினைக்கும் தீர்வைப் கொடுத்து விடுவார் என்றோ, அவர் நினைத்தால் கிழக்கை சொர்க்க புரியாக்கி விடலாம் என்றோ, முஸ்லிம்களுக்கு இனிமேல் எந்தப் பிரச்சினையும் கிழக்கில் இருக்கப் போவதிலை என்று நான் இங்கு கூற வரவில்லை! அவ்வாறு நினைப்பதே மிகப் பெரிய முட்டாள்தனமாகும் அவ்வாறு நினைக்கவும் கூடாது.
ஆளுனர் என்பது முஸ்லிம்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்பதற்காக அமர்த்தப்பட்டவர் அல்ல' இங்கு முஸ்லிம்கள் மட்டும் தனி இனமாக வாழவும் இல்லை. மாறாக மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணமாகும்!
எல்லா சமூகத்தவர்களுக்கும் பிரச்சினைகள், தேவைகள், குறைபாடுகள் என்று இருந்து கொண்டே இருக்கிறது. அவ்மூவின மக்களுக்கும் சேவை செய்வதற்காக ஜனாதிபயினால் அமர்த்தப்பட்ட ஒருவரே இந்த ஆளுனர் ஆவார். இதில் உரிமை கொண்டாடுவதற்கோ, மார்பு தட்டுவதற்கோ ஒன்றுமே இல்லை.
ஆனால் நம் சமூகம் சந்தோசப்படுவது மட்டுமல்ல இப்பதவியை கொடுத்த ஜனாதிபதிக்கு நன்றிகளையும் ஆளுனருக்கு வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது எமது கடமையாகும்' மனித இயல்பும் கூட.
காரணம் அன்று தொட்டு இன்றுவரை கிழக்கைப் பொறுத்தவரை மற்ற சமூகத்தவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், தேவைகளை விடவும் முஸ்லிம் சமூகத்துக்கு அதிகமாகவே இருந்து வருகிறது என்பதை நாம் அறியாமல் இல்லை. இருந்தும் இதற்கு முன்பு இருந்தவர்களால் அதற்காக தீர்வைப் கொடுக்கவும் இல்லை' கொடுப்பதற்கு யாரும் முயற்சிக்கவும் இல்லை என்பதை மறுக்க முடியாது.
ஆனால் முன்பு போன்று இம்முறையும் பொரும்பான்மை சமூகத்தைத் சேந்த யாராவது அமர்த்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு விடயத்தை புரியவைப்பதிலே காலம் கடந்திருக்கும்" அத்தோடு அவர்களின் நோக்கமும் வேறாக இருந்திருக்கலாம்.
ஆனால் தமிழ் பேசக்கூடிய ஒருவர் ஆளுனராக இருப்பதனால்' தமிழ் பேசக்கூடிய இனத்தவர்களே இங்கு அதிகமாக வாழ்வதனாலும்' பிரச்சினைகள் இருப்பின் அதை இலகுவில் பேசி தீர்க்கக்கூடிய சூழ்நிலை இங்கு தற்போது உருவாகியுள்ளது என்பதே உண்மை.
அதுமட்டுமல்ல கிழக்கு மக்களின் பிரச்சினைகள், தேவைகள், யாருக்கு எதை பெற்றுக் கொடுக்க வேண்டும், எந்த சமூகத்துக்கு எதை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அனைத்தும் சகோ ஹிஸ்புலாஹ்வுக்கு நன்கு தெரியும். அத்தோடு சமூகத்துக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் தனது ஆளுமையின் மூலம் அதை தீர்த்து வைக்கக் கூடிய திறமை ஹிஸ்புல்லாஹ்விடம் இருப்பதனால் நிச்சயம் இதன்மூலம் சில விடயங்களையாவது தீர்த்து வைக்க முடியும் என்பதே எனது கருத்தாகும்.
குறுகிய காலம் என்றாலும் சரி, நீண்ட காலம் என்றாலும் சரியே இருக்கும் காலத்தைப் பயன்படுத்தி முடியுமான விடயங்களைப் பொற்றுக் கொண்டு' அடுத்த தேவைகளை பெறுவதற்கு முயற்சிப்பதே காலத்தின் தேவையாகும்.
அதைவிடுத்து அவர் எதைச் செய்யப் போகிறார், அவர் மக்கள் பிரதிநிதியாக அனுப்பட்டடவரா, பாராளுமன்ற உறுப்பினரா அமர்த்தப்பட்டவாரா என்றெல்லாம் வீரமுழக்கம் போட்டு தலைகீழாக நின்று ஆடுவது நல்லதல்ல சகோதர்களே! யார் செய்தாலும் நல்லது நடந்தால் சரி என்ற எண்ணம் ஒவ்வொருத்தருக்கும் உருவாக வேண்டும்.
இதற்கு முன்பு மக்கள் பிரதிநியாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சர்களாகவும் இருந்து கொண்டு' இருந்தவைகளையும்
பறிகொடுத்துவிட்டு வக்கற்றவர்களாக இருந்ததை நாம் ஒருநாளும் மறக்கவும்இல்லை மறக்கவும் முடியாது.
அப்படியான வஞ்சக அரசியலை மீண்டும் மீண்டும் செய்து மக்களை குழப்புவதற்கு முயற்சிகாமல்' இருக்கும் காலத்துக்குள் பொறுமையாகவும் நிதானமாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டு மாற்றுச் சமூகத்தவர்களின் ஒத்துழைப்போடு எமது சமூகத்தின் தேவைகளை, உரிமைகளை வென்றெடுப்பதற்கு
புதிய ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை முடிந்தளவுக்கு வழங்கி" மூவின சமூகமும் இனமத பேதங்களை மறந்து நின்மதியாய் ஒற்றுமையாய் வாழும் அழகிய கிழக்கை கட்டியொழுப்புவோம்.