ஜனாதிபதி மைத்திரியின் சட்டமீறல்கள் விபரிக்கிறார் சட்ட முதுமானி வை. எல். எஸ் ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான்-


மைத்திரியின் சட்டமீறல்கள்

———————— - - - - - - - - - - - - - - - -
தான் நியமித்த பிரதமரை ஏற்பதா? இல்லையா? என்பதை பாராளுமன்றம் தீர்மானிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் பாராளுமன்றத்தை மூடினார்.


புதிய பிரதமர் நியாயமானவர் என்றால் அதனைச் செய்யவேண்டாம்; என்று சொல்லியிருக்க வேண்டும்; ஆனால் சொல்லவில்லை. இதன்மூலம் இருவரும் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோத ஆட்சிசெய்வதை ஏற்றுக்கொண்டனர்.


மூடிய பாராளுமன்றத்தை திறக்கமுன்னே கலைத்தார். புதிய பிரதமர் நியாயமானவர் என்றால் அதனை எதிர்த்திருக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் ஆணையையும் சட்டத்தையும் காலுக்குள் போட்டுமிதிக்க இருவரும் ஆயத்தம்; என்று பறைசாற்றினர்.


நீதிமன்ற உதவியுடன் பாராளுமன்றம் மீண்டும் கூடி (14/11/2018) புதிய பிரதமர்மீது நம்பிக்கைத் தொடர்பாக தீர்மானிக்க விழைந்தபோது பாராளுமன்றத்தைக் குழப்பி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத இயலாத்தனத்தை வெளிப்படுத்தினார்கள்.


தன்கட்சிக்காரர்கள் குழப்ப, அரசியலமைப்புச் சட்டமும் நிலையியற்கட்டளையும் நிலையியல்கட்டளையை இடைநிறுத்த அனுமதிக்கும்போது, நிலையியல் கட்டளையைப் பின்பற்றாத வாக்கெடுப்பை ஏற்கமுடியாதென்றார் ஜனாதிபதி.


இதன்மூலம் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறினார். பாராளுமன்ற அதிகாரத்தைக் கேள்வி உட்படுத்தினார். அரசியலமைப்பைப் புறக்கணித்தார்.


சிறு குழந்தைகளை தாஜாபண்ணுவதுபோல் 15ம் திகதி கட்சிகளை அழைத்து மீண்டும் பெயர்குறித்து வாக்கெடுப்பு நடத்துங்கள்; ஏற்றுக்கொள்வேன்; என்றார். நம்பியது குழந்தைகள். மீண்டும் 16ம் திகதி வாக்கெடுப்பு.


வந்தார்கள் கட்சிக்காரர்கள். பாராளுமன்றம் கலவர மண்டபமாகியது. பாராளுமன்றத்தின் தலைவரே போலிசார் புடைசூழ உள் நுழைந்து தன் ஆசனத்திலேயே அமரமுடியாமல் எறிபொருட்கள் தாக்காதிருக்க போலிசார் கேடயம் பிடிக்க அகதியைப்போல் ஓர் ஓரத்தில் இருந்து வாக்கெடுப்பு நடத்திவிட்டு சென்றார்.


கட்சிக்காரர்கள் பாராளுமன்றத்தைக் குழப்பிவிட்டு சபாநாயகர் மீது பழியைப்போட, ஜனாதிபதியோ வாக்கெடுப்பை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.


மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஜே வி பி யினர் சுதாகரித்துக்கொண்டார்கள். ரணிலைப் பிரதமராக்க மாட்டேன்; என்ற தன் சபதத்தில் பிடிவாதமாக இருக்கும் மைத்திரி பேச்சுவார்த்தைக்கு அழைப்பதெல்லாம் வெறும் ஏமாற்று என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கோ எப்படியாவது பிரதமர் பதவியை பெற்றுவிடவேண்டும். இப்பொழுதாவது இரங்காதா மைத்தியின் மனசு; என்ற எதிர்பார்ப்பில் மீண்டும் சந்திக்க சென்றனர். குழந்தைகளுக்கு இனிப்பு மாத்திரம் வழங்கப்பட்டது.


பாராளுமன்றத்தில் புரிகின்ற அடாவடித்தனத்தால் மக்கள் மனம் மாறுகின்றது; என்பதைப் புரிந்ததும் பாராளுமன்றப் பகிஷ்கரிப்பு ஆரம்பமானது. பழி சபாநாயகர் மேல், சபாநாயகர் பக்கச்சார்பென்று.


இவர்கள் அரசாங்கமென்றால் இவர்களிடம் பெரும்பான்மை இருக்கவேண்டும். பெரும்பான்மை இருந்தால் பக்கச்சார்பான சபநாயகரை ஏன் பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் உடனடியாக நீக்கிவிட்டு ஏன் புதிய சபாநாயகரை நியமிக்கவில்லை?


எனவே, பெரும்பான்மை இல்லாத ஒருகூட்டம் தங்களை ஆட்சியாளர்கள் என்று கூறுகின்றதென்றால் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு எதற்காக? இது அரசியலமைப்பு இல்லாத நாடென்று பிரகடனப்படுத்திவிட்டு ஆட்சி செய்யலாமே! இதற்குள் இவர்கள் நீதி வேறு பேசுகிறார்கள்.


பெரும்பான்மை காட்டல்
——————————-
சட்டரீதியாக, பாராளுமன்றத்திற்கு வெளியே 113 காட்டவேண்டிய எந்தத் தேவையுமில்லை. ஆயினும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக த தே கூட்டமைப்பும் ஐ தே முன்னணியின் வேட்பாளரை ஆதரிப்பதாக கடிதம் கொடுத்துவிட்டார்கள். ( அதற்குப் பகரமாக என்ன வாக்குறுதி பெற்றுக்கொண்டார்கள் என்பது வேறு தலைப்பின்கீழ் பார்க்கப்பட வேண்டியது).


122 மஹிந்தவை எதிர்த்து வாக்களித்தாலும் ஐ தே க யிடம் இருப்பது 101 மட்டுமே; என்றார்கள். இப்பொழுது த தே கூ இன் 14ம் சேர்ந்து 115. இதற்குமேலும் ஒரு கணம்கூட தாமதிக்க அனுமதிக்க முடியுமா?


மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

————————————————
இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வேண்டுமானால் ஐ தே கட்சி ரணிலின் பெயரைப் மீண்டும் உறுதிப்படுத்தி ஒரு கடிதத்தை அனுப்பலாம். ஆனாலும் இந்தக்குழந்தைகள் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்கள். வழமைபோன்று இனிப்பு வழங்கி அனுப்பியிருக்கின்றார்.


புதன்கிழமை மீண்டுமொரு வாக்கெடுப்பு நடத்தட்டுமாம். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தையாம்.


மைத்திரிக்கு சட்டம் எதுவும் தெரியாவிட்டாலும் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் ஏமாற்றுவதில் கடும் கில்லாடி. ஆனால் ஆசியாவிலேயே ஒரு சிறந்த ராஜதந்திரி என்றழைக்கப்படும் ரணில் ( அரசியல்ரீதியில் அவர் வெற்றியடைந்தவரா என்பது வேறுவிடயம்) பதவிக்காக சிறுகுழந்தையாக எத்தனை தடைவை வேண்டுமானாலும் எங்களை அழையுங்கள் பேச்சுவார்த்தைக்கு. எப்படியாவது பதவியைத் தந்தால் போதும்; என்கின்ற நிலையில் இருக்கின்றார்.


மைத்திரிக்கும் புரிந்துவிட்டது, இவர்கள் பதவிக்காக எவ்வளவும் இறங்கி வருவார்கள், இவர்களை ஏமாற்றலாம் என்று. இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சப்போகின்றது.


சரணாகதி அரசியலேன்?
———————————
113 காட்டியாகிவிட்டது. இனியும் என்ன பேச்சுவார்த்தை. இனியும் என்ன வாக்கெடுப்பு? என்ன விட்டுக்கொடுப்பு. நாட்டுக்குத் தேவை ரணிலைப் பிரதமராக்குவதல்ல, இந்த ஜனாதிபதியோ, எதிர்கால ஜனாதிபதிகளோ சட்டத்தை மீறக்கூடாது; என்பதுதான்.


கடிதம் வழங்குவது ஜனாதிபதி என்பதைத்தவிர பிரதமர் நியமனத்தில் அவருக்கு தற்றுணிவு அதிகாரம் ( discretionary power) எதுவும் இல்லை. தற்றுணிவு அதிகாரம் இருந்தால்கூட முழுமையான தற்றுணிவு அதிகாரம் யாருக்குமில்லை. (No untrammelled or absolute discretionary power)


இந்நிலையில் இந்த ஏதேச்சதிகாரத்தை அனுமதித்தால் எதிர்காலத்தில் இந்த ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த ஜனாதிபதி அரசியலமைப்பை உதறித்தள்ளிவிட்டு நடக்க நினைத்தால் நாட்டு நிலைமை, சிறுபான்மைகளின் நிலைமை என்ன?


நான் அறிந்தவரை இலங்கை வரலாற்றில் சட்டவாக்கத்துறையின் தீர்மானத்தை நிலைநிறுத்த நீதித்துறையின் உதவி நாடப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். சட்டவாக்க த்துறையை நிறைவேற்றுத்துறை செல்லாக்காசாக மாற்றியிருக்கின்றது.


சட்டவாக்க த்துறைக்கு மீண்டும் மீண்டும் பிரேரணையை நிறைவேற்றுங்கள்; என்பதும் அதற்கு உடன்பட்டுக்கொண்டு சட்டவாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள் பிரேரணை நிறைவேற்றுவதும் அதனை அவர் மீண்டும் மீண்டும் நிராகரிப்பதும்; வாடிக்கையாகி விட்டது. பாராளுமன்றம் அதிகபட்சம் சிறுமைப்படுத்தப்பட்டுவிட்டது.


குழந்தைகளாய் இருந்தது போதும்

———————————————-
இதுவரை நீங்கள் பதவிக்காக குழந்தைகளாய் நடந்துகொண்டதுபோதும். உங்களை அடிக்கடி அழைத்து அவர் இனிப்புத் தந்ததும் போதும். இதற்குக் காரணம் இப்போராட்டம் உங்களுக்கான, உங்கள் பதவிக்கான போராட்டமாக உங்களுக்குள் நீங்கள் அடையாளம் கண்டது.


இது உங்களுக்கான போராட்டம்அல்ல. இது நாட்டுக்கான போராட்டம். எதிர்கால சந்ததிக்கான போராட்டம். நாட்டின் தலைவரே சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதற்கெதிரான போராட்டம். பாராளுமன்றத்தை சிறுமைப்படுத்துவதற்கெதிரான போராட்டம்.


எனவே, வெளிப்படையாகவே, 113 நிறுவப்பட்டு விட்டது. இனியும் அவர் ரணிலைப் பிரதமராக நியமிக்காவிட்டால் அவருடன் எந்தப்பேச்சுவார்த்தைக்கும் செல்லாதீர்கள். எந்த நிபந்தனையையும் ஏற்காதீர்கள். உடனடியாக நீதிமன்றத்தை நாடுங்கள். பரவாயில்லை இந்த நாடு இன்னும் சில நாட்கள் அரசாங்கம் இல்லாமல் இருக்கட்டும்.


நீங்கள் அவருடன் பேச்சுவார்த்தைக்குப் போனாலும் அவர் ஒன்றும் செய்யப்போவதில்லை; இனிப்புத் தருவதைத்தவிர. அப்பொழுதும் இதே சட்டவிரோத அரசுதான் தொடரப்போகிறது.


நீங்கள் இதுவரை அவருடன் சமாதானம் பேசியதுதான் உங்களது முதலாவது தவறு. நீங்கள் அவருடன் நியாயம் பேசியிருக்க வேண்டும்.


பிரதமர் தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவிடாமல் ஏன் மூடினீர்கள்? என்று நியாயம் கேட்டிருக்கவேண்டும்!


நிலையியல் கட்டளைச் சட்டத்தைப் பின்பற்றித்தான் பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றவேண்டும்; என்று எந்த சட்டத்தில் இருக்கின்றது; என்ற கேள்வியை அவரிடம் தொடுத்திருக்க வேண்டும்!!


225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருக்கும் பிரதமராக வரும் உரிமை இருக்கின்றது அவருக்கு பெரும்பான்மை இருக்குமாயின். அவ்வாறிருக்க, குறித்த பாராளுமன்ற உறுப்பினரைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று கூற உங்களுக்கு அதிகாரம் தந்த சட்டமெது? என்று அவரிடம் வினாத்தொடுத்திருக்க வேண்டும்?


இனியாவது நிமிர்ந்து நில்லுங்கள். அவருடைய கருணையால் ரணிலைப் பிரதமராக்காதீர்கள். அடுத்த ஒரு மாதத்திலோ இருமாதத்திலோ மீண்டும் ரணிலை நீக்கி இதே பல்லவியைப் பாடுவார். அல்லது உங்கள் ஆட்சி அவருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும்.


மாறாக உரிமையுடன் பதவியைப் பெறுங்கள். சட்டத்தை கசக்கியெறிந்த ஜனாதிபதி சட்டத்தை முத்தமிடுமிடுவளவு பாடம் கற்றுக்கொடுங்கள். எல்லாவற்றிற்குமுதல் நிமிர்ந்து நில்லுங்கள்! நிமிர்ந்து நில்லுங்கள்!! நிமிர்ந்து நில்லுங்கள் !!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -