யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கப்படாமையால் பல குடும்பங்கள் பாதிப்புக்களாகியுள்ளனர் என மாநகர சபை உறுப்பினர் கெ.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர் முகாமைத்துவ அமைச்சால் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னரே வீடுகளுக்கான இழப்பீடு வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதிப்புற்ற நிலையில் உள்ளனர் என மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டை கஜா புயல் தாக்கியது. புயலால் யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-86 ஜே-87 ஜே-88 கிராம சேவக பிரிவுக்குட்பட்ட பல வீடுகள் பாதிப்புள்ளாகின. அவை ஓலைகள் அல்லது தகரங்களினால் கூரை அமைக்கப்பட்டவையாகும். அதனால் பலத்த மழை மற்றும் புயலால் பாதிப்புள்ளாகின.
இவ்வாறான பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருந்தேன்.எனினும் பொதுவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் ரூபா 10 ஆயிரம் பணமும் இடர் முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்டது. எனினும் மேற்படி பிரிவில் வசிக்கும் மக்களுக்கோ அல்லது வீடுகளின் சேதாரங்களுக்கு அந்தக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
புயலைத் தொடர்ந்து நீடித்த மழையுடனான காலநிலையால் அந்தக் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கபப்ட வேண்டும் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.