கல்முனை முதல்வரின் அபிவிருத்தி திட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பாராட்டு

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் அபிவிருத்திக்காக முதல்வர் றகீப் அவர்கள் முன்னெடுத்துள்ள மூலோபாய திட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பொறியியலாளர் ரி.சர்வானந்தன் ஆகியோரும், மாகாண ஆளுனருடன் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதி மற்றும் கல்முனை பொதுச் சந்தைக்கான புதிய கட்டிடத் தொகுதி என்பவற்றை நிர்மாணிப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், அவற்றுக்கான பட வரைபுகளை பார்வையிட்டு, அவற்றிலுள்ள அம்சங்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தினார். இவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பை தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையில் நிலவும் வளப்பற்றாக்குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தீயணைப்பு படைப்பிரிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் ஆளுநரிடம் முதல்வர் றகீப் வலியுறுத்தினார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், கிழக்கு மாகானத்திலுள்ள ஏனைய மாநகர சபைகளையும் உள்ளடக்கியதாக இவ்விடயம் தொடர்பில் விசேட கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்வதற்கான நேர ஒதுக்கீட்டை வழங்கினார்.
மேலும், கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்தும் இதன்போது முதல்வரினால் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தம்மால் எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள், வரி அறவீடு தொடர்பிலான விடயங்கள், சபையின் சொந்த வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் முதல்வர் விபரித்துக் கூறினார். இதற்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநர், இந்த ஏற்பாடுகளை பின்வாங்காமல் முன்னெடுக்குமாறும் இவை அனைத்துக்கும் தான் முழுமையான அங்கீகாரத்தையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் திண்மக்கழிவகற்றல் சேவையை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நாளாந்தம் வீடொன்றுக்கு 10 ரூபா வீதம் குப்பை வரி அறவீடு செய்வதற்கு உத்தேசித்திருப்பதாக முதல்வர் முன்வைத்த ஆலோசனையை வரவேற்ற ஆளுநர், இது நல்லதோர் மூலோபாய திட்டம் என்று பாராட்டுத் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -