ஊடகமாநாட்டில் கல்முனை மாநகரசபை எதிரணியினர் சவால்!
காரைதீவு நிருபர் சகா-இதுவரை மக்களிடமிருந்த அறவிடப்படவேண்டிய 10கோடி ருபா வரிப்பணம் நிலுவையாகவே உள்ளது. துணிவிருந்தால் மேயர் அதனை அறவிட்டுக்காட்டட்டும்.
இவ்வாறு கல்முனை மாநகரசபையின் எதிரணி உறுப்பினர்கள் நேற்றுக்கூடிய ஊடகமாநாட்டில் சவால் விடுத்தனர்.
இவ் ஊடகமாநாடு (30) வெள்ளி இரவு கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எம்.முபீத் சாய்ந்தமருது தோடம்பழ சுயேச்சை அணிசாரி;பில் உறுப்பினர் ஆ.ஆர்.எம்.அசீன் ஆகியோர் கருத்துரைத்தனர்.
கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் சபையை தனது கட்சிநலனுக்காக தான்தோன்றித்தனமாகவும் சர்வாதிகாரத்துடனும் தன்னிச்சையாகவும் சட்டத்திற்கு முரணானவகையிலும் நடாத்திவருகிறார் என்றும் இதனை தமக்கு வாக்களித்த மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமெனவும் கோரி இந்த ஊடகமாநாட்டை நடாத்துவதாக ஏற்பாட்டாளர்கள் அங்கு கூறினர்.
அவர்கள் மேலும் கூறுகையில்:
கல்முனை மாநகரசபை இனமத பிரதேச பேதம் காட்டி நிருவாகம் நடாத்திவருகிறது. எதிரணி உறுப்பினர்களாகிய தாம் கொண்டுவரும் பிரேரணைகளை மேயர் தட்டிக்கழித்துவிட்டு தனது பிரேரணையை மாத்திரம் வீட்டோபவர் என்றுகூறி சர்வாதிகாரமாக நிறைவேற்றுகிறார்.
இதுவரை சபையில் எடுத்த எந்த தீர்மானமும் அமுல்படுத்தப்படவில்லை. வெட்கம்.வெளிப்படைத்தன்மை கொஞ்சமும் இல்லை.
கடந்த 8மாதங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் முதல்கூட்டத்தைத்தவிர ஏனைய அத்தனை கூட்டங்களும் குழப்பத்திலேயே முடிவடைந்துள்ளன. அராஜகம் ஆணவம் தலைவிரித்தாடுகின்றது.
கடந்தகால மேயர்கள் வங்கிகளில் நிலையானவைப்பாக 3கோடி 40லட்சருபாவை மக்களுக்காக வைப்புச்செய்துள்ளனர். அவற்றில் அரைவாசியை எடுத்து மக்களின் திண்மக்கழிவு முகாமைத்தவத்தை சீராகமேற்கோள்ள இயந்திரஉபகரணங்களை கொள்வனவு செய்யவேண்டுமெனக்கோரியபோது அதனை மேயர் நிராகரித்தார்.
இனியாவது அவர் வரட்டுக்கௌரவத்தையும் திமிரையும் அராஜகத்தையும் கைவிட்டு மக்களுக்காக இனமத கட்சிபேதங்களுக்கு அப்பால் சேவையாற்ற வருவாரெனின் அவருக்கு ஆதரவு வழங்குவோம். இன்றேல் பிரச்சினைதான்.
நாம் 25 உறுப்பினர்கள் இணைந்துள்ளோம். அவர் ஒத்துழைக்காவிடின் அவரது பதவிக்கு ஆப்படிப்போம். மக்கள் எங்களை புதினம் பார்க்க சபைக்கு அனுப்பில்லை. என்றனர்.