இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமாரக நியமிக்கப்பட்டார். இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பிரதமர் பதவிக்கு உரிமை கோரிவந்த நிலையில், கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இந்த நெருக்கடி நிலையினை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்ததுடன், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.
எனினும், தற்போது வரையிலும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விசா தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இலங்கை பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.