இந்த தீர்ப்பை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், " வடக்கு - கிழக்கு மாகாணத்தை இலங்கை இந்திய உடன்படிக்கையே இணைத்தது. இதனை இன்று நிராகரித்துள்ள மஹிந்த அரசு, வடக்கு கிழக்கை சிங்கள மயப்படுத்தும் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றும், 75வீதம் தமிழ் பேசுவோரைக் கொண்ட திருமலை மாவட்டத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் மஹிந்த அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இப்பிரிப்பைக் கண்டித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் "கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்துவதாகவுமே வடக்கு கிழக்கை பிரித்துள்ளீர்கள். வடக்கு கிழக்கில் பெரும்பாண்மை மக்கள் தமிழ் பேசுபவர்கள். இந்நாட்டில் சம உரிமையோடு தமிழர்கள் வாழ்ந்ததில்லை. தங்கள் பிரதேசத்திலாவது சம உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே நாம் போராடுகின்றோம் என்றுகூறி பாராளுமன்றத்திலே பேசியிருந்தார்.
அதேநேரம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இணைந்த வடகிழக்கை பிரிப்பது என்பது "இந்திய இலங்கை ஒபபந்தத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதற்கு சமமானதாக அமையும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு இரா.சம்பந்தன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சம்பந்தன் அவர்கள் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் "வடக்கும் கிழக்கும் தனி மாகாணமாக பிரிக்கப்பட்டதன் மூலம் அங்கு வாழும் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும், 18 வருடங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்ட இந்த இரு மாகாணங்களும் மஹிந்த ராஜபக்ச சனாதிபதியாக இருக்கும்போதே நடந்துள்ளது என்றும், இதற்கான முழுப் பொறுப்பையும் மஹிந்த ராஜபக்சவே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று, முன்னால் ஜனாதிபதியை குற்றம்சாட்டி பேசியிருந்தார் ( நன்றி: தினக்குரல் 24.11.2006)
இந்த நிலையில் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா, கஜேந்திர குமார், ஆகியோர் புதுடில்லியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இந்த விடயங்களைப் பற்றி முறையிட்டிருந்தார்கள். அதன் காரணமாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஊடாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்( தினக்குரல் :27.11.2006).
(தகவல்: இலங்கை தேசிய முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், 1948-2007 )
ஆகவே வடக்கும் கிழக்கும் நீதிமன்ற உத்தரவின் மூலம் பிரிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான முழுப்பொறுப்பையும் அன்றய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதே சாட்டப்பட்டிருந்தது. இப்படியான பழிகளைச் சுமந்துகொண்டும் வடக்கு கிழக்கை பிரித்துதந்த மஹிந்த ராஜபக்சவையும், அதற்காக பின்னாலிருந்து செயல்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையும், இதற்காக வழக்குதாக்கள் செய்த ஜே.வி.பி கட்சியினரையும் மட்டுமே பாராட்டவேண்டும். இந்த விடயத்தில் எந்தக் "கார்ட்போட்" தலைவர்களோ அல்லது அவர்களின் ஏஜண்டுகளோ இதற்கு எந்த விதத்திலும் உரிமை கோர முடியாது என்பதே எங்களின் கருத்தாகும்.