வீரமுனை நூல்வெளியீட்டுவிழாவில் மன்சூர் எம்.பி. கேள்வி!
காரைதீவு நிருபர் சகா-இன்று அம்பாறை மாவட்டத்தில் பூர்வீகமாக தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவருகின்ற இடத்தில் பௌத்தவிகாரை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா?
இவ்வாறு வீரமுனையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டுவிழாவொன்றில் பேசிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் கேள்வியெழுப்பினார்.
வீரமுனை பெண்எழுத்தாளர் யுவதாரினி செசிலியா சோமசுந்தரம் எழுதிய கன்னக் கவிதைநூலாகிய கரையைத்தேடி எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றபோது பிரதம அதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நூல்வெளியீட்டுவிழா வீரமுனை ஜங்கரன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் அ.சுதர்சன் தலைமையில் வீரமுனை இ.கி.மி. மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் உரையாற்றுகையில்:
சகோதரி செசிலியா எழுதிய முதல் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். ஒரு தமிழ் அதுவும் பெண் எழுத்தாளர் ஒருவரது நூல் வெளியீட்டுவிழாவில் நான் பிரதமஅதிதியாக கலந்துகொள்வது. இதுதான் இன்றைய காலத்தின்தேவை.
இவ்வாறு நாட்டில் புரிந்துணர்வோடு வாழும் இக்காலகட்டத்தில் இந்துக்களில்லாத இடங்களில் ஆலயம் தேவையில்லை.முஸ்லிமக்கள் இல்லாத இடத்தில் பள்ளிவாசல் தேவையில்லை. சிங்களவர் இல்லாத இடத்தில் விகாரை தேவையில்லை.
நான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்தபோது வாகரையில் பள்ளிவாசல் கட்ட முஸ்லிம்கள் கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். முஸ்லிம்கள் வாழாத இடத்தில் எதற்காக பள்ளிவாசல்? அது தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் இடம்.
ஆனால் நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது எனக்கூறும் இக்காலகட்டத்திலும் அம்பாறை மாவட்டத்தில் வெளிப்படையாக விகாரை அமைக்கும் பணியை ஒருசில பாராளுமன்ற பிரதிநிதிகளே வெளிப்படையாகக்கூறுமளவிற்கு நிலைமை மாறியுள்ளது.
சிறுபான்மையின மக்களின் தலைமைகளுக்கு முக்கிய கடமையுள்ளது. நாம் எதிர்கால சமுதாயத்திற்கு நாம்விட்டுச் செல்லவேண்டியது கல்வியை மட்டுமல்ல மாறாக நிம்மதியாக சுதந்திரமாக வாழக்கூடிய சூழலையும்தான்.
எதிர்கால சந்ததி சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை விட்டுச்செல்வதானால் எம்மிடையே புரிதல்கள் வேண்டும்.ஜக்கியம் வேண்டும். குறிப்பாக நாம் பிரிந்துவாழமுடியாது. ஒருவருக்கொருவர் பகைத்துக்கொண்டு வாழமுடியாது.
பெண்எழுத்தாளர் செசிலியாவின் கரையைத்தேடி கவிதைகள் தத்ருபமானவை. இனத்துவரீதியில் இல்லாதவை. அவர் மேலும் பல படைப்புகளைத்தரவேண்டும். என்றார்.
விழாவில் நீதியமைச்சின் உதவிச்செயலாளர் ஏ.மன்சூர் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா மாவட்ட இந்துகலாசாரஉத்தியோகத்தர் என்.பிரதாப் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நூலாசிரியரைக் கௌரவித்து பொன்னாடைபோர்த்தப்பட்ட அதேவேளை சேவையாற்றிய அதிதிகளுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
நூலாசிரியரால் முதற்பிரதி பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு வழங்கிவைக்கப்பட்டது.