நாடளாவிய ரீதியில், இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 1,968 ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 1,264 முறைப்பாடுகள், தற்போது விசாரணைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இவற்றுள், மோசடி குறித்த முறைப்பாடுகள் 900, ஊழல் முறைப்பாடுகள் 254, தவறாக சொத்துக்களைச் சேர்த்த முறைப்பாடுகள் 63 மற்றும் 47 சுற்றிவளைப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 28 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 29 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 74 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றுள் 57 முறைப்பாடுகள் மேல் நீதிமன்றங்களிலும், 17 நீதவான் நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.