=புலம்பெயர் எழுத்தாளர் கரவைதாஸன் எச்சரிக்கை=
தமிழ் பௌத்தம் என்கிற முகமூடியுடன் அண்மையில் வெளி கிளம்பிய சிலர் கன்பொல்லை கிராமத்தை பிழையாக வழி நடத்த முற்படுவது பெருங்கவலை தருகின்றது என்று டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற முற்போக்கு இலக்கியவாதியும், தமிழ் பௌத்தருமான கரவைதாஸன் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்துக்கு குறிப்பாக கன்பொல்லை கிராமத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் விஜயம் மேற்கொண்டு அவதானித்த இவர் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவரின் ஊடக அறிக்கை வருமாறு:-
நான் ஒரு உண்மையான தமிழ் பௌத்தன் ஆவேன். பௌத்தம் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்க்கை நெறியை போதிக்கின்ற வழிமுறை ஆகும். ஆனால் உண்மையான பௌத்தர்களை இலங்கையில் காண்பது மிக அரிதாக உள்ளது. அதே போல உண்மையான தமிழ் பௌத்தர்களை பெரும்பாலும் காணவே முடியாது உள்ளது.
பௌத்த முகமூடியுடன் எமது நாட்டில் மிலேச்சத்தனங்கள் பல இடம்பெற்ற வண்ணம் உள்ளன. பௌத்த தர்மம் மிலேச்சத்தனத்துக்கு முற்றிலும் விரோதமானது. அதே போல தமிழ் பௌத்தம் என்கிற முகமூடியுடன் தீய சக்திகள் ஊடுருவியும் உள்ளன.
யாழ். மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு காலத்தில் கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தபோது கன்பொல்லை கிராமத்தில் தமிழ் பௌத்த எழுச்சி இடம்பெற்று இதன் மூலம் தமிழ் பௌத்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு கன்பொல்லை கிராம மக்களுக்கு கல்வி உரிமை கிடைக்க பெற்றது. இப்பாடசாலையை அமைப்பதில் முன்னின்று உழைத்த முன்னோடிகளில் எனது தந்தையும் ஒருவர். இப்பாடசாலையில் கற்ற பின்புலத்தில்தான் நான் ஒரு உண்மையான தமிழ் பௌத்தனாக வாழ்கின்றேன்.
ஆனால் விடுதலை புலிகளின் காலத்தில் எமது கன்பொல்லை கிராமத்தில் தமிழ் பௌத்தம் மழுங்கி போனதில் வியப்பு இல்லை. ஆனால் இப்போது சிலர் தமிழ் பௌத்தம் என்கிற முகமூடியுடன் எமது கிராமத்துக்குள்ளும் ஊடுருவி உள்ளனர். இவர்களை எமது கிராமத்தையே பிழையாக வழி நடத்துகின்றனர். எமது கிராம இளையோர்களை பிரிவினைவாதத்துக்கு இட்டு செல்கின்ற நச்சு வேலைகளை நுட்பமாக செய்கின்றனர்.
எனவே நாம் அனைவரும் இது குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டி உள்ளது. இவர்களின் தீய சுய இலாப வேலைகளுக்கு நாம் பலிக்கடா ஆகி விடவே கூடாது. இல்லையேல் எதிர்காலம் முழுவதையும் தொலைத்தவர்களாகி விடுவோம் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கின்றேன்.