எப். தீனத்-
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தை அண்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மனித கழிவுகளை (மலசல கூட கழிவுகள்) கையாளும் நிலையத்தினால் ஏற்பட்டுவரும் சுகாதார சீர்கேடு தொடர்பில் கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது சுயற்சைக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றை 2018.07.20ம் திகதி வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர்.
மேற்படி மகஜரை சாய்ந்தமருதைச் சேர்ந்த மாநகர சபை கௌரவ உறுப்பினர்களான எம்.எஸ்.அப்துல் றபீக், எம்.வை.எம்.ஜஹ்பர், ஏ.ஆர்.எம். அஸீம், எம்.ஐ.ஏ.அஸீஸ் ஆகியோர் இணைந்து அம்பாறை மாவட்ட செயலாளர், சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை மாநகர முதல்வர், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கையளித்தனர்.
குறித்த நிலையம் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பின்புறமாக அமைந்துள்ள பிரதேசத்தில், சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பொலிவேரியன் கிராமத்திற்கு அண்மையிலேயே உள்ளது.
இந்த மனிதக் கழிவு பராமரிப்பு நிலைய கட்டிடத்துடன் இணைந்ததாகவே மாடு அறுக்கும் மடுவம் அமைந்துள்ளது என்பதுடன் குறித்த நிலையத்தில் பழைய வாகண டயர்களை உடைக்கும் தொழிற்சாலையும் இயங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையத்திலிருந்து வரும் துர்நாற்றம் மற்றும் டயர்களை பற்ற வைப்பதால் ஏற்படும் கரும் புகையால் தொடர்ச்சியாக சாய்ந்தமருது முழு கிராமத்துக்குமே சுகாதார சீர்கேடு நிலவும் விடயம் பொதுமக்களால் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந்நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பொலிவேரியன் கிராமத்தில் பாடசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம், தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை அலுவலகம், விதாதா வள நிலையம், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல், அரபுக் கல்லூரி மற்றும் அரச காரியாலயங்கள் குறிப்பாக கிட்டத்தட்ட 1000 குடியிருப்புகள் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள் மிக விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர்.
இதில் விஷேட அம்சம் என்னவென்றால் இது வரை காலமும் எவ்வித சுற்றாடல் பாதுகாப்பு அனுமதியோ மாநகர சபை காரியாலங்களிருந்தோ எவ்வித அனுமதியும் இல்லாமல் இதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.